தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வடமொழி முன்னிலைப் படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றுள் ஒன்று ஆன்மிகத் துறை !
ஆன்மிகம் என்னும் வரையறைக்குள்
வரும் திருக்கோயில் வழிபாடு, அதன் கால்வழியில் வரும் ஐந்திறம்
(பஞ்சாங்கம்), மனையடிக் கலை (வாஸ்து), கோளியக்கப் பலன் (சோதிடம்)
அனைத்திலும் வடமொழிச் சொற்களின் ஆளுமையே மேலோங்கி நிற்கின்றன
!
ஐந்திறத்தின்படி (பஞ்சாங்கம்) சூரியன் கிழக்கில் எழுகின்ற அதே நேரத்தில் நிலவும் (MOON) கிழக்கில் எழுகின்ற நாள் மறைமதி நாள் (அமாவாசை).
சூரியன் மேற்கில் மறைகின்ற அதே நேரத்தில் நிலா கிழக்கில் எழுகின்ற நாள்
நிறைமதி நாள் (பௌர்ணமி)
!
மறைமதி நாள் அல்லது நிறைமதி
நாளிலிருந்து சூரியனும் (SUN) நிலவும் (MOON) எழுகின்ற நேரத்தில் வேறுபாடு ஏற்படும்
போது, இவ்விரு கோள்களுக்கும் இடையில் உள்ள தொலைவு வேறுபடத் தொடங்குகிறது
! எப்படி ?
பூமியிலிருந்து நாம் பார்க்கும்
போது மறைமதி (அமாவாசை) நாளில் நிலவுக்கும்
சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு (வாதத்திற்காக) 10 கி.மீ என்று வைத்துக்கொண்டால், அடுத்த நாள் இரண்டுக்கும் இடையிலுள்ள தொலைவு 11 கி.மீ. இருக்கும். இப்படியே அதிகரித்து
நிறைமதி (பௌர்ணமி) நாளில் 25 கி.மீ தொலைவு ஆகிவிடும் !
நிறைமதி (பௌர்ணமி) நாளுக்குப் பின் இந்தத் தொலைவு 25 .கி.மீ அளவிலிருந்து 24 கி.மீ, 23 கி.மீ, 22 கி.மீ என்று குறைந்து மறைமதி (அமாவாசை)
நாளில் 10 கி.மீ அளவுக்கு
வந்துவிடும் !
சூரியனுக்கும் நிலவுக்கும்
இடையில் ஒவ்வொரு நாளும் இருக்கும் தொலைவை
(DISTANCE) தான் வடமொழியாளர்கள்
“திதி” என்று கூறுகின்றனர். திதிகள் பிரதமை, துவிதியை, திரிதியை,
சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,
சப்தமி, அஷ்டமி, நவமி,
தசமி, ஏகாதசி, துவாதசி,
திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை
/ பௌர்ணமி என்று மொத்தம் 15 ஆகும். வளர்பிறையில் வரும் பிரதமையன்று சூரியனுக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தொலைவு
நான் முன் பத்தியில் குறிப்பிட்டது போல 10 + 1 = 11 கி.மீ என்றால், தேய்பிறையில் வரும் பிரதமையில் தொலைவு
25 – 1 = 24 கி.மீ இருக்கும் !
பிரதமை என்றால் மறைமதி
அல்லது நிறைமதி நாளுக்கு அடுத்து வருகின்ற முதல் நாள் என்று பொருள். இவ்வாறே துவிதியை = இரண்டாம் நாள், திரிதியை = மூன்றாம் நாள், சதுர்த்தி
= நான்காம் நாள் பஞ்சமி = ஐந்தாம் நாள்,
சஷ்டி = ஆறாம் நாள், சப்தமி
= ஏழாம் நாள், அஷ்டமி = எட்டாம்
நாள், நவமி = ஒன்பதாம் நாள், தசமி = பத்தாம் நாள், ஏகாதசி
= 11 –ஆம் நாள், துவாதசி = 12 – ஆம் நாள், திரயோதசி – 13 – ஆம்
நாள், சதுர்த்தசி – 14 – ஆம் நாள் என்று
பொருள்!
சரி ! பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 “திதி”களையும் தமிழில் எப்படிச் சொல்லலாம் ?
பிரதமை = ஒருமை (நாள்);
துவிதியை = இருமை (நாள்);
திரிதியை = மும்மை (நாள்);
சதுர்த்தி = நான்மை (நாள்);
பஞ்சமி = ஐம்மை (நாள்);
சஷ்டி = அறுமை (நாள்);
சப்தமி = எழுமை (நாள்);
அஷ்டமி = எண்மை (நாள்);
நவமி = தொண்மை (நாள்);
தசமி = பதின்மை (நாள்)
ஏகாதசி = பதினொருமை (நாள்)
துவாதசி = பதினிருமை (நாள்)
திரயோதசி = பதி(ன்)மும்மை (நாள்)
சதுர்த்தசி = பதிநான்மை (நாள்)
அமாவாசை = மறைமதி (நாள்)
பௌர்ணமி = நிறைமதி (நாள்)
[அடைப்புக்குறிக்குள்
தரப்பட்டுள்ள நாள் என்பதை நீக்கியும் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்]
பிரதமை என்பதை ”ஒருமை” என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன். ”ஒருமை” என்பதற்கு ஒப்பற்ற தன்மை, ஒரு தன்மை, ஒரு பிறப்பு, ஒற்றுமை,
தனிமை, பிளவுபடாத மனம் என்று தான் பொருள்கள் உண்டே
தவிர “ஒன்று”
என்று பொருளில்லை என்று சிலர் வீண்வாதம் செய்யக்கூடும். காலத்திற்கேற்ப அகரமுதலியில் புதிய பொருள்களை இணைத்துக் கொள்வதில் தவறில்லை
!
நூறு ஆண்டுகளுக்கு முன்பு
எந்தத் தமிழ் அகரமுதலியிலும் ”வானொலி”, கணினி, வான்கோள் போன்ற சொற்கள் இடம்பெற்றதில்லை.
இப்போது அவை இடம்பெற்றுள்ளன அல்லவா ? அது போன்றே, “ஒருமை = ஒன்று”, ”இருமை
= இரண்டு”, மும்மை = மூன்று”
“நான்மை = நான்கு”, “ஐம்மை
= ஐந்து” போன்ற சொற்களும் இடம்பெறலாமே
!
“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது நன்னூல் நூற்பா
462. ஆகையால் நான் பரிந்துரைக்கும் இச்சொற்களைத் தமிழறிஞருலகம் ஏற்கும்
என நம்புகிறேன் ! சுருங்கிய வடிவும், பொருளாழமும்,
தமிழ் மரபுக்கு இணக்கமானதாகவும், ஓசை நயம் உடையதாகவும்
பொருத்தமான மாற்றுச் சொற்கள் இருந்தால் தமிழன்பர்கள் அவற்றைப் பரிந்துரைக்கலாம்
!
----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[திருவள்ளுவரண்டு:
2053, கன்னி (புரட்டாசி)14]
{01-10-2022}
------------------------------------------------------------------------------------------------