எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

தமிழ் (30) “ச”கரத்தை மறந்த தமிழர்கள் !

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்த  கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ?

 ------------------------------------------------------------------------------------

 

தமிழ் நெடுங்கணக்கில் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்து 216, ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன என்பது தமிழ் படித்த அத்துணைப் பேருக்கும் தெரியும். படித்து முடித்தாகிவிட்டது; ஏதோவொரு பணியையும் தேடிக் கொண்டாகிவிட்டது. சிலருக்குத் திருமணமும் ஆகிவிட்டது !

 

இத்துணைக் காலத்திற்குப் பிறகு, ஒரு சிலருக்கு, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள கர வரிசை எழுத்துகள் மட்டும் பகையாகிப் போய்விட்டன. எப்படி என்று கேட்கிறீர்களா? சில நண்பர்களை அழைத்து ஆய்வு செய்வோமே ! முதலில் சண்முகம் என்பவரை அழைத்து உங்கள் பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் என்று சொல்லுங்கள். அவர் தமிழில் ஷண்முகம்என்றும் ஆங்கிலத்தில் SHANMUGAM என்றும் எழுதி இருப்பார். அவருக்கு எழுத்து மறந்து போய்விட்டதா அல்லது அதன் மீது ஏதாவது வெறுப்பா ?

 

இன்னொருவரை குறிப்பாகச் சரவணன் என்பவரை - அழைத்து அவர் பெயரை இரு மொழிகளிலும் எழுதச் சொல்லுங்கள். “SHARAVAVAN” என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். அன்பரே, தமிழிலும் எழுதுங்கள்  என்று சொன்னால்,  I AM SORRY என்று சொல்லிவிட்டு ஷரவணன்என்று எழுதுகிறார். என்ன நண்பரே ! சரவணன்என்று தானே எல்லோரும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நீங்கள் மட்டும் ஷரவணன்என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா ? என்று வினவினால், பெயரியல் கலையின்படி (NAMALOGY)  எழுத்துக்குப் பதில் எழுத்துப் பயன்படுத்தினால் நான் பெரிய ஆளாக வருவேன் என்று  பெயரியல் கலைஞர் (NAMALOGIST) ஒருவர் சொன்னார். என்கிறார் !

 

தாய்க் குலத்திலிருந்து ஒருவரை அழைத்து சாந்திஎன்று எழுதச் சொல்லுங்கள். அவர் உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “SHANTHI” என்று எழுதுகிறார். தமிழில் எழுதச் சொன்னால் ஷாந்திஎன்று வரைகிறார். என்ன ஆயிற்று இந்த தமிழ்க் குலத்திற்கு ? நாம் வாழ்வது தமிழகம் தானா ? தமிழகத்தில் இன்று தாராளமாகப் புழங்கும் கரப் பெயர்களைப் பாருங்களேன் !

 

(01) ஷங்கர்  (02) ஷிவா  (03) ஷிவகுமார்  (04) ஷேகர்  (05) ஷெல்வகுமார். (06) ஷரவணன்  (07) ஷாந்தி  (08) ஷண்முகம் (09) ஷம்பத் குமார் (10) ஷெல்வா (11) ஷெல்வி

 

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டும் இந்த கரத்திற்கு அடிமையாகிப் போனது ஏன் ? இவர்கள் எல்லாம் தம் சொந்த அறிவை இழந்து வாழும் சிந்தனைச் சிற்பிகள்ஆகிவிட்டார்களோ ?  பித்தலாட்டக் காரர்களின் பேச்சைக் கேட்டுத் தன் பெயரைச் சிதைத்துக் கொண்ட பேரறிவாளர்கள்ஆகப் பிறப்பெடுத்து விட்டார்களோ ?

 

பெயரியல் கலைஞன் (NAMALOGIST) என்று சொல்லிக் கொண்டு தொலைக் காட்சிகளில் கரும்பலகையும் சுண்ணக் காம்புக் (CHALK PIECE) கையுமாக காட்சிகள் நடத்தும் பித்தலாட்டக் காரர்களின் பின்னால் அணிவகுத்துச் செல்ல இவர்கள் எப்படித் துணிந்தார்கள் ? எதையும் பகுத்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய இந்த பளிங்குச் சிலைகள் சாக்கடைக்குள் சரிந்து கிடப்பது ஞாயந்தானா ?

 

உறவியல் கலைஞர் (FAMILIOLOGIST) என்று சொல்லிக் கொண்டு நாளை இன்னொரு ஏமாற்றுக்காரன் வந்து உன் தந்தையை மாற்றிவிட்டு இன்னொரு ஆளைத் தந்தையாக  ஏற்றுக் கொண்டால், ஒளிமயமான எதிர்காலம் உனக்கு உண்டு என்று சொன்னால், இந்த பேதைகள் பெற்ற தந்தையையே மாற்றி விடுவார்களா ?

 

கோடி கோடிச் செல்வர்களாக இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கும் டாட்டா”, பிர்லா, அம்பானி, அதானி, அகர்வால் எல்லோரும் பெயரியல் கலைஞர்களின் பேச்சைக் கேட்டுப் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்வில் உயர்வடைந்தவர்கள் தானா ?

 

பெயரியல் கலைக்கு ஒரு மனிதனின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையானால்,  நாட்டில் நடமாடும் அத்துணைப்  பெயரியல் கலைஞர்களும், தங்கள் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டு டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி அகர்வால்ஆகிவிட வேண்டியது தானே ? எதற்காகத் தொலைக் காட்சிகளில் தோன்றி ஏமாறுபவர்கள் இருக்கிறார்களா என்று தூண்டில் போட்டுக் கேவலமான பிழைப்பை நடத்த வேண்டும் ?

 

ஷரவணன், ஷண்முகம், ஷாந்தி, ஷிவா, ஷேகர் எல்லோரும் சிந்தியுங்கள் ! ஏமாற்றுக்காரர்களின்  தூண்டிலுக்கு நீங்கள் இரையானது போதும். சிதைந்து போன உங்கள் பெயர்களை மீட்டெடுத்து, முன்பு போல் சரவணன், சண்முகம், சாந்தி, சிவா, சேகர்என்று மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அழகிய தமிழில் குறிஞ்சி வேந்தன் (சரவணன்), சிலம்புச் செல்வன் (சண்முகம்), பண்பழகி (சாந்தி), சுடர்வண்ணன் (சிவா), முடியரசன்( சேகர்) என்று மாற்றி அமைத்து நான் தமிழன்என்று பறை சாற்றித் தலை நிமிர்ந்து வாழுங்கள் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ.

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

-------------------------------------------------------------------------------------

தமிழ் (29) தமிழறிஞர்கள் பேரவை தொடங்கப்பட வேண்டும் !

அலுவலகப் பணிகளில் தமிழைக் கட்டாயமாக்கி 62 ஆண்டுகள் ஆகின்றன !

 -----------------------------------------------------------------------------------

தமிழக அரசின் கல்வி அமைச்சராக இருந்த மறைந்த திரு.சி.சுப்ரமணியம் அவர்கள் சட்ட மன்றத்தில், தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை 1956 –ஆம் ஆண்டின் XXXiX எண் சட்டமாக, கொண்டுவந்து நிறைவேற்றினார். இச் சட்டப்படி, அரசு அலுவலகங்களில்  தமிழில் கடிதப் போக்கு வரவு 14-01-1958 முதல் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கை வெளியிடப் பெற்றது !

 

அன்னைத் தமிழ் ஆட்சி மொழியாகி 64 ஆண்டுகள் ஆகின்றன. அலுவலகப் பணிகளில் தமிழைக் கட்டாயமாக்கி 62 ஆண்டுகள் ஆகின்றன .ஆனால், அரசு ஆணைகள் வெளியீடு, கோப்புகள் பேணுதல், கடிதங்கள் அனுப்புதல், ஒப்பந்தப் புள்ளிகள் கேட்பு, முன்னீடு அறிவிப்புகள் (TENDER NOTICES), நிலக் கையகப் படுத்தல் போன்ற அனைத்துப் பணிகளும் 100% தமிழில் நடைபெறுகின்றனவா என்றால் இல்லை !

 

புதிதாக உருவாக்கப்படும் துறைகள், துறைத் தலைமை அலுவலர் பணியிடங்கள், சார்நிலை அலுவலர் பணியிடங்கள் போன்றவற்றின் பெயர்கள் முதலில் ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்டு, பின்பு தான் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன ! தமிழில் சிந்தித்து, தமிழிலேயே பணியிடங்கள் உருவாக்கப்படும் நிலை வரவேண்டும் !

 

தமிழ் வழிக் கல்வித் திட்டம் என்னும்  இலக்கு முடமாக்கப்பட்டு, ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகள் பல்லாயிரக் கணக்கில் பெருகிவிட்டன. அரசுப் பள்ளிகளில் கூட ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளிலும் ஆங்கிலம் சொல்லித் தரப்படும் நிலை உருவாகியுள்ளது !

 

தமிழை ஆழமாகப் பயிற்றுவித்துப் புலவர்என்னும் பட்டம் அளித்து வந்த தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன அல்லது அனைத்துப் பாடங்களும் சொல்லித் தரப்படும் கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுவிட்டன. இத்தகைய புலவர்பட்டம் பெற்றோரே உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணி அமர்வு செய்யப்பெற்றனர் !


தமிழ்க் கல்லூரிகளில் 100% தமிழே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்த நிலை மாறி, கலைக் கல்லூரிகளில் உயிரியல், பயிரியல், வணிகவியல், உளவியல், அளவையியல், கணிதவியல், என்று பிற பாடங்கள் நிரம்பப் புகுத்தப் பெற்று, தமிழ் சொல்லிக் கொடுக்கும் பாட வேளைகள் 10% அளவுக்கும் கீழாகக் குறைந்துவிட்டன !

 

தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் வழங்கப்பெறும் பட்டங்களின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வழங்கப் பெறும் பட்டங்கள் கூட B.A, B.Sc., M.A, M.Sc. M.Com., M.Phil, என்று ஆங்கில வழியிலேயே இருக்கின்றன. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு; மாநில அரசின் ஆட்சி மொழி தமிழ்; ஆட்சி மொழியான தமிழின் பெயரால் இயங்கி வரும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப் பெறும் பட்டத்தின் பெயரோ ஆங்கிலத்தில் !

 

தமிழ் நாட்டில் தமிழக மக்களுக்காக என்று சொல்லி எடுக்கப்பெறும் திரைப்படங்கள் எல்லாமே கடந்த 10 ஆண்டுகளில் ஆங்கிலப் பெயர்களைத் தாங்கியே வருகின்றன. திரைப்படத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செய்தி விளம்பரத் துறை இதைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை !

 

தமிழகத்தில் வெளியாகும் செய்தித் தாள்களில் கலப்பு மொழி தான் கோலோச்சுகிறது; தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்ப் பகைமைச் செயல்களில் ஈடுபடும் செய்தித் தாள்களுக்கு அரசின் விளம்பரங்கள் தங்குத் தடையின்றி வழங்கப்படுகின்றன !

 

தொலைக் காட்சி ஊடகங்களில் அரசின் ஆட்சி மொழியான தமிழ் சிதைக்கப்படுகிறது - சிறுமைப்படுத்தப்படுகிறது.  அரசின் ஆட்சி மொழியாகச் சட்டமியற்றி அறிவிக்கப் பெற்ற தமிழை யார் சீரழித்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அரசுத் துறைகள் இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை !

 

பிற மாநில இளைஞர்கள் தமிழக அரசுத் துறைகளிலும், மின்வாரியம், கூட்டுறவுச் சங்கம் போன்ற அரசுச் சார்பு நிறுவனங்களிலும் பணியமர்வு செய்யப்படுகின்றனர். இச்செயலால், தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது !

 

முன்பு தமிழகப் புலவர் குழுஎன்று ஒரு அமைப்பு இயங்கி வந்தது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்றம் தரக் கூடிய கருத்துகளை அரசிடம் கோரிக்கையாக வைத்து நிறைவேற்றச் செய்து வந்தது. அடுத்து இந்தப் பணியைத் தமிழகத் தமிழாசிரியர் கழகம்செய்து வந்தது. இவை போன்ற அமைப்புகள் இருந்த போது தமிழ் நலம் காக்கப் பெற்றது; தமிழர் நலம் உறுதி செய்யப் பெற்றது !

 

காலப்போக்கில், பல காரணங்களால் தமிழகப் புலவர் குழு”, “தமிழகத் தமிழாசிரியர் கழகம்போன்றவை செயலிழந்து இருக்குமிடம் தெரியாமல் போயின. இன்றைய நிலையில், ஞாயமான கோரிக்கையைக் கூட அரசிடம்  முன் வைத்து நிறைவேற்றித் தருவதற்கு அமைப்புகளே இல்லை என்னும் துன்ப நிலை தமிழகத்தில் நிலவுகிறது !

 

தமிழும், தமிழர்களும் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமாயின், அரசியல் சார்பற்ற தமிழ் அமைப்பு ஒன்று உருவாக வேண்டும். இந்த அமைப்புக்கென விதிமுறைகளை உருவாக்கி, சங்கங்கள் சட்டப்படி, பதிவுத் துறையில் பதிவு செய்து, அரசினால் ஏற்கப்பட்ட அமைப்பாக இயங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தேர்தலை நடத்தி, இந்த அமைப்பின் ஆட்சியாளர்களைத்  (நிருவாகிகளை) தேர்வு செய்ய வேண்டும் !

 

இந்த அமைப்பு, பதிவு செய்யப்பெற்ற அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதால், அரசும், அதிகாரிகளும் இதற்கு உரிய உயரிடம் தந்தாக வேண்டும். தமிழ் மற்றும் தமிழர் நலன் சார்ந்த  செயல்பாடுகளே இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கும் என்பதால், இதற்கு தமிழறிஞர்கள் பேரவைஎன்று பெயர் வைத்தல் சால்புடையதாக இருக்கும் !

 

சங்கங்கள் சட்டப்படிப் பதிவு செய்யப் பெற்று, வரவு செலவுக் கணக்குகள் ஆண்டுக்கொரு முறை தணிக்கை செய்யப்பெற்று, சங்கப் பதிவாளரிடம் அளிக்கப்படும். இந்த அமைப்பின் பதிவும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். பதிவு செய்யப்பெற்ற அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதால், இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்பட எந்த அரசு அலுவலரும் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேரத் தடை இருக்காது. அரசு அலுவலர்களின் நடத்தை விதிகள் இதைத் தடுக்காது !

 

தமிழறிஞர்கள் பேரவையில்யாரெல்லாம் உறுப்பினர்களாகச் சேரலாம் என்பது  பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவு செய்யலாம். மாநில அளவில் செயல்படும் இந்த அமைப்புக்கு மாவட்ட அளவில் ஆட்சியாளர்கள் (நிருவாகிகள்) இருப்பார்கள் !

 

எத்துணை பேர் இந்த அமைப்பில் சேருவார்கள் என்று இப்போது கவலைப் படத் தேவையில்லை. 7 பேர் இருந்தால் போதும், இந்த அமைப்பைத் தொடங்கிப் பதிவு செய்துவிடலாம். பின்பு, நிறையப்பேர் வந்து உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்வார்கள் ! அடுத்த சில மாதங்களில்  ஆயிரக் கணக்கில் உறுப்பினர்கள் உள்ள அமைப்பாக தமிழறிஞர்கள் பேரவைமாறுவதை யாராலும் தடுக்க முடியாது !

 

தமிழின் நிலை மிகவும் நலிவடைந்து வருகிறது. நெருக்குதல்கள் நாளுக்கு நாள் மிகுந்து வருகின்றன. தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத  ஒரு குமுகாயம் தமிழ் நாட்டிற்குள்ளேயே உருவாகி வருகிறது. தமிழர்களின் நலமும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, “தமிழறிஞர்கள் பேரவைதொடங்கப்படுதல்  இன்றியமையாத் தேவையாகும். இந்த அமைப்பைத் தொடங்கிட முன்முயற்சி எடுக்குமாறு சில அன்பர்களிடம் வேண்டுகோள் வைத்து, தொடர்பில் இருந்து வருகிறேன் !

 

இந்தச் சூழ்நிலையில், இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரே வரியிலாவது உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். குறிப்பாக, ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களும் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

 

பணியில் இருக்கும் ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கவிஞர்கள், அரசு அலுவலர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், மென்பொறியளர்கள், தமிழின் பால் ஈடுபாடு கொண்டிருக்கும் வணிகர்கள், தொழிலமைப்பினர் மற்றும் பிறவகை அன்பர்களும், தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் வகையில்  பேரவை தேவைஅல்லது தேவையில்லைஎன்று பதிவு செய்யலாம். !

 

கருத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் உங்கள் மின்னஞ்சல் (e mail i.d) முகவரியையும் சேர்த்துப் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யப் பெற்ற அமைப்பாகத் தமிழறிஞர் பேரவைஇயங்குமாதலால், இதற்கான விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இதைப்பற்றிச் சில நாள்களில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் !

 

தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த அமைப்பில் நாம் சேர முடியுமா, முடியாதா என்னும் கவலையை விடுத்து, சேரமுடியும் என்னும் நம்பிக்கையுடன் மொழிக்கும், இனத்திற்கும் நலன் பயக்கும் அமைப்பு என்பதால் உங்கள் கருத்தைத் தவறாது பதிவு செய்யுங்கள் !

 

மிகவும் முதன்மைத் தன்மை வாய்ந்த இந்தக் கட்டுரையைத் தமிழகம் எங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தால் தான், நமது நோக்கம் நிறைவேறும். எனவே தமிழ்ப் பணி மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், நீங்கள் உறுப்பினராக உள்ள வேறு சில குழுக்களுக்கு இதைக் கட்டாயம் பகிர்வு செய்திட வேண்டும். அதை எல்லோரும் படிக்க வேண்டும்.  உங்கள் பகிர்வைப் படிக்கும் ஒவ்வொருவரும், “பேரவையின் தேவை பற்றி அப்போது தான் கருத்துத் தெரிவிக்க முடியும் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

------------------------------------------------------------------------------------

திங்கள், 30 மே, 2022

தமிழ் (28) தமிழில் உரையாடுதல் தமிழர்களின் கடமை !

அன்னைத் தமிழிருக்க அயல்மொழி நமக்கெதற்கு ?

 -----------------------------------------------------------------------------------

எழிலரசி: மலர் ! வா ! வா ! நலமாக இருக்கிறாயா ? கடைத் தெருவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் .என்னுடன் வருகிறாயா ? ஒரு துயிலி” (NIGHTY) வாங்கி வர வேண்டும் ! எனது பேடுருளியிலேயே (MPOED) சென்று வரலாம் !

 

மலர்மதி: சரி எழிலரசி ! வருகிறேன் ! பேடுருளிஎதற்கு? எனது பாவையூர்தியில் (SCOOTY) சென்று வரலாமே ?

 

எழிலரசி: சரி ! அப்படியே செய்வோம் ! வண்டிக்குக் காப்புறுதிச் சான்று (INSURANCE CERTIFICATE) கைவயம் வைத்திருக்கிறாயா ? நீ உகையுரிமம் (DRIVING LICENCE) வைத்திருக்கிறாயா ?

 

மலர்மதி: இரண்டுமே இருக்கின்றன ! கவலைப் படாதே ! தலைச் சீரா (HELMET) மட்டும் உங்கள் வீட்டிலிருந்து இரண்டு எடுத்துக் கொள் !

 

எழிலரசியின் அப்பா: எழில் ! திரும்பி வரும்போது கபிலர் தெருவுக்குச் சென்று தாங்குதளம் கட்டுநரைப் (CENTERING FITTER) பார்த்து, நாளை வந்து என்னைப் பார்க்கச் சொல் !

 

எழிலரசி: சரி அப்பா ! நாங்கள் சென்று வருகிறோம் !

 

மலர்மதி: எழில் ! உன் தந்தை தாங்கு தளம் கட்டுநர் என்றாரே  ! அப்படியென்றால் யார் அவர் ?

 

எழிலரசி: மலர் ! புதிதாக  வீடு கட்டும் போது, கற்காரைக் கலவையைக் கொட்டிக் கூரை அமைப்பதற்கு வாய்ப்பாகப் பலகைகளையும், முட்டுக் கம்புகளையும் கொண்டு கிடைமட்டத் தளம் அமைக்கிறாரே அவர் தான் தாங்குதளக் கட்டுநர் (CENTERING FITTER). ஆங்கிலத்தில் CENTERING என்றால் தமிழில் தாங்குதளம் என்று பொருள் !

 

மலர்மதி: நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறதே ! உங்கள் வீட்டில் தமிழ்ச் சொற்கள் நிரம்பவும் புழங்குமோ ?

 

எழிலரசி: ஆமாம் ! என் பெயர் உனக்குத் தெரியும் ! தந்தையின் பெயர் அருள்நம்பி ! தாயார் இளம்பிறை ! தம்பி இளமுருகு ! எங்கள் வீட்டில் ஆங்கிலச் சொல் ஒன்று கூடப் புழங்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம் !

 

மலர்மதி: நல்ல முடிவு ! இங்கிலாந்து மக்களோ, அமெரிக்க மக்களோ தமிழில் பேசுவதில்லை ? தமிழக மக்கள் தான் சுரணை கெட்டுப் போய், ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் ! தெரிந்த தமிழ்ச் சொற்களைக் கூடத் தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் !

 

எழிலரசி: ஆமாம் மலர் ! இன்று மாலை வருகிறேன் என்பதை விடுத்து இன்னிக்கு ஈவ்னிங் வர்ரேன்என்பது என்ன ஞாயம் ? இந்த அழகில் தமிழ் தான் எனக்கு மதர் டங்என்று பீற்றல் வேறு !

 

மலர்மதி: சரி விடு எழில் ! உங்கள் வீட்டுக் குளிர்ப்பேழையில் (REFRIGERATOR) பனிக்கட்டி நீக்கமைப்பு (DEFROST CONTROL) இருக்கிறதா ? எங்கள் பேழையில் அஃது இல்லை !

 

எழிலரசி: அப்படியா ! வேறு பேழை வாங்குவது தானே !

 

மலர்மதி: வாங்க வேண்டும் ! எந்த நிறுவனத்தின்  வனைவை (MAKE) வாங்கலாம் ?

 

எழிலரசி: குறிஞ்சி நிறுவன வனைவை (MAKE) வாங்குங்கள் ! நன்றாக இருக்கும் !

 

மலர்மதி: சரி எழில் ! பேசிக்கொண்டே கடைத் தெருவுக்கு வந்துவிட்டோம் ! எந்தத் துணிக் கடைக்குச் செல்லலாம் ?

 

எழிலரசி: அழகேசன்  அணிய ஆடையகத்திற்குச் (READY MADE STORE) செல்வோம் ! அங்கு துயிலிமட்டுமே விற்கப்படுகிறது ! ஞாயமான விலையில் தரமான துயிலிகள் கிடைக்கின்றன !

 

[இருவரும் கடைக்குள் செல்கின்றனர்]

 

மலர்மதி: ஐயா ! எனக்குத் துயிலி (NIGHTY) ஒன்று வேண்டும் ! நான்கைந்து துயிலிகளை எடுத்துப் போடுங்கள்!

 

அழகேசன்: தருகிறேன் அம்மணி ! தம்பி ! ஆதவனிடம் சென்று இரண்டு செவ்விளநீர் சீவி விரைவாக வாங்கி வா !

 

எழிலரசி: நான் தான் துயிலி வாங்க வந்தேன் ! நீயும் வாங்கப் போகிறாயா ?

 

மலர்மதி: ஆமாம் எழில் ! துயிலிஎன்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோவொரு இனம்புரியாத உந்துதல் என்னுள் எழுந்து விட்டது ! அழகிய தமிழ்ச் சொல் துயிலி!

 

[”துயிலிகளைப் பார்வையிட்டு எதைத் தேர்வு செய்யலாம் என்று சில நிமிடங்கள் குழம்பி நிற்கின்றனர்]

 

அழகேசன்: தம்பி ! இளநீர் வாங்கி வந்து விட்டாயா ? உறிஞ்சு குழலைப் (STRAW) போட்டு அம்மணிகளிடம் கொடு !

 

மலர்மதி: ஐயா ! அணிய ஆடையகத்தில் பல்லவி (PRESSURE COOKER), வறுகலன் (FRYING PAN), உண்கலம் (MEALS PLATE), நீர்க்குவளை (TUMBLER), சேமச் செப்பு (THERMOS FLASK), எல்லாம் வைத்திருக்கிறீர்களே ? அவை எதற்கு ?

 

அழகேசன்: அம்மணி ! ஒளியுருக்கில் (STAINLESS STEEL) செய்த இன்னும் பல அடுகலன்களும் (UTENSILS) உள்ளே இருக்கின்றன ! எங்களிடம் துயிலிவாங்கும் ஒவ்வொருவருடைய பெயரையும் பதிவு செய்து கொள்வோம். மாத இறுதியில் குலுக்கல் முறையில் 10 பேரைத் தேர்வு செய்து இந்தப் பொருள்களைப் பரிசாக வழங்குவோம் !

 

எழிலரசி: ஐயா ! இப்படிப் பரிசு தருவதற்கு உங்களுக்குக் கட்டுப்படி ஆகிறதா ?

 

அழகேசன்: அம்மணி ! அழகிய தமிழில் துயிலிஎன்று கேட்டு வாங்குவோருக்கு அளிக்கும் இந்தப் பரிசு, அவர்களுக்கு அளிக்கும் பரிசு அன்று ! தமிழுக்கு அளிக்கும் பரிசு  ! தமிழனாகப் பிறந்து, தமிழையே பேசி, வாழ்ந்து வரும் நான் என் அன்னைத் தமிழுக்கு இதைக் கூடச் செய்யவில்லை எனில், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி இல்லாதவன் !

 

[எழிலரசி, மலர்மதி இருவரும் திகைத்து நிற்கின்றனர். சுரணையுள்ள தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்]

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

------------------------------------------------------------------------------------

  


தமிழ் (27) ”ரா.தமிழ்ச்செல்வன்” என்று எழுதாதீர் !

சில எழுத்துகள் மொழி முதல் வாரா என்பதை உணருங்கள் !

---------------------------------------------------------------------------------------------

 

ஒரு சொல்லின் முதல் எழுத்தாக எந்தெந்த எழுத்துகள் வரும் என்பது பற்றி நன்னூலில் நூற்பா 102  கீழ்க் கண்டவாறு உரைக்கிறது !

 

---------------------------------------------------------------------------------------------

பன்னீர்  உயிரும்  க,,,,  ,,,,

,,இவ் ஈரைந்து உயிர்மெய்யும் மொழிமுதல்

---------------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:

------------------------------

பன்னீர் உயிரும் = முதல் வரையிலான 12 உயிர் எழுத்துகளும்; , , , , , , , , , , ஆகிய = க, , , , , , , ய என்னும் எழுத்துகள், இவ்வீரைந்தும் = இந்த  10 உயிர் மெய் எழுத்துகளும்; மொழி முதல் = சொல்லின் முதல் எழுத்தாக வரும் !

 

----------------------------------------------------------------------------------------------

 

நன்னூல் என்பது தமிழ் இலக்கண நூல். இதில் 462 நூற்பாக்கள் (சூத்திரங்கள்) உள்ளன ! இந்நூல் என்ன சொல்கிறது ? எந்தவொரு சொல்லிலும் முதல் எழுத்தாக மேற்குறிப்பிட்ட அ, , , , , , , , , , , ஔ ஆகிய 12  உயிர் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வரும்; இவையன்றி, , கா, கி, கீ என்று தொடங்கி கௌ என முடியும் 12 உயிர்மெய் எழுத்துகளில் ஏதாவது ஒன்று வரும். க்மெயெழுத்து என்பதால், அது சொல்லின் முதலில் வராது !

 

இவ்வாறே எஞ்சிய  ச, , , , , , , , ங ஆகிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் அவற்றின்  தொடர் எழுத்துகளும் மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரும். இது தான் நன்னூல் வகுத்து அளித்திருக்கும்  விதி !

 

நன்னூல் இலக்கண விதியின்படி, மொழிக்கு முதலாக (சொல்லின் முதல் எழுத்தாக)  வரக் கூடாத எழுத்துகள் எவை , , , , , , , ன ஆகிய எட்டு எழுத்துகளும் அவற்றின் தொடர் எழுத்துகளும் , ஆய்த எழுத்தும் எந்த வொரு சொல்லிலும் முதல் எழுத்தாக வராது; வந்தால் அது தமிழ் இலக்கணத்திற்குப் புறம்பானது !

 

நாம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகிறோம் ! தமிழில் படித்து அல்லது தமிழைப் படித்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழில் பேசுகிறோம்; தமிழில் எழுதுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கவும் செய்கிறோம் !

 

இத்தகு நிலைமையில், தமிழை நாம் சரியாக எழுதுகிறோமா ? சற்று ஆழ்ந்து நோக்கினால், தமிழை நாம் முறைப்படி எழுதுவது இல்லை என்பது புரியும் ! எப்படி என்று கேட்கிறீர்களா ? நம்மில் பலர் கீழ்க் கண்டவாறு தானே எழுதுகிறோம் ?

 

(01) ரகுராமன்  (02) ராசேந்திரன்  (03) ரீட்டா  (04)  ரூபாய்  (05) ரெங்கசாமி !

(06)  ரேகா  (07) ரொக்கம்  (08) ரோசுமேரி  (09) லவகுசா  (10) லாவண்யா !

(11) லீலா (12) லெட்சுமி (13) லைலா (14) லோகமாதா !

 

பெற்றோர் சூட்டிய பெயர்களை மாற்ற வேண்டும் என்று சொல்ல வில்லை ! ஆனால், அப் பெயர்களை தமிழ் மரபின்படியாவது (தமிழ் இலக்கணப்படியாவது) எழுதலாமே !  இரகுராமன், இராசேந்திரன், இரீட்டா, உருபா, அரங்கசாமி / இரெங்கசாமி, இரேகா, உரொக்கம், உரோசுமேரி, இலவகுசா, இலாவண்யா, இலீலா, இலட்சுமி / இலெட்சுமி, இலைலா, உலோகமாதா என்று எழுதுவதில் இடையூறு ஒன்றுமில்லையே !

 

என் பெயர் ரகுராமன். அதை ஆங்கிலத்தில் ”RAGURAMAN” என்று தான் எழுதுகிறேன். எனவே என் பெயரை இரகுராமன்என்று எழுத மாட்டேன், “ரகுராமன்என்று எழுதுவதே சரி என்று வாதம் புரிபவர்களும் இருக்கிறார்கள் ! இத்தகைய  மாந்தர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியரைத் தான் நாம் குறை சொல்ல வேண்டும்; ஏனெனில் அந்த ஆசிரியர் தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறாரே தவிர தமிழ் உணர்வை அந்த மாந்தனுக்கு ஊட்டத் தவறி விட்டாரே !

 

இராமசாமியின் மகன் தமிழ்ச் செல்வன் என்று ஒருவர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் தன் பெயரை எழுதுகையில் இரா.தமிழ்ச் செல்வன் என்று தான் எழுத வேண்டும்; ஆனால் அப்படி எழுதாமல் ரா.தமிழ்ச் செல்வன் என்று எழுதினால், அவர் பெயருக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விடுகிறதே ! ராஎன்று தலைப்பு எழுத்துப் போட்டுக் கொள்ளும் தமிழ்க் கவிஞர்களும், தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் ஆசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள் ! இவர்கள் எல்லாம் தமிழ் படித்த தமிழர்கள் என்பதை நாம் நம்புவோமாக !

 

தமிழ்ப்பணி மன்றம் முகநூலில், ஒரு நண்பர் என் தமிழ் உணர்வைப் பற்றி முன்பு முனைப்பாகக் குறை கூறி வந்தார். அவர் ஒரு தமிழ் இயக்கம் சார்ந்தவர். தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று மார் தட்டிக் கொள்பவர். அவர் பெயருக்கு முன்னால் அவர் போட்டுக் கொள்ளும் தலைப்பு எழுத்துகள் எவை தெரியுமோ ? ”ரா.வெ.இத்தகைய போலித் தமிழர்களும் இம் மண்ணில் உலா வரத்தான் செய்கின்றனர் !

 

நண்பர்களே ! தமிழன் என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றால், இயன்ற அளவுக்கு அவ்வுணர்வைப் பெயரிலும் எழுத்திலுமாவது காண்பிப்போமே ! சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக வாழ்தல் நகைப்புக்கு உரியதாக அன்றோ  ஆகிவிடும் !

 

----------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு:

--------------------

 

டப்பா, டாம்பீகம் என்று வரிசையில் எழுதப்படும் எந்தச் சொற்களும் தமிழ்ச் சொற்களே அல்ல ! அது போன்றே வரிசை எழுத்துகளில் தொடங்கும் ரம்பம்”, ராணி”, போன்ற சொற்களும், ”வரிசை எழுத்துகளில் தொடங்கும் லட்சுமி”, “லஞ்சம்போன்ற சொற்களும் தமிழ்ச் சொற்களே அல்ல ! எல்லாவற்றையும் படித்து விட்டு, நான் ராஎன்று தான் என் தலைப்பெழுத்தை (INITIAL) போட்டுக் கொள்வேன் என்று விடாப்பிடியாக யாராவது சொன்னால், அவர்களை மன்னித்து விடுவோம் ! வேறென்ன செய்வது ?

 

---------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

--------------------------------------------------------------------------------------------