தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைத்துக் கொள்ளல் அருகிவிட்டது ஏன் ?
---------------------------------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்கள் பொதுவாக ”சங்க கால இலக்கியங்கள்” என்றும் “சங்கம் மருவிய கால இலக்கியங்கள்” என்றும் வகைப் படுத்தப்படுகின்றன. சங்க காலம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி,பி 2 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம் !
எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை சங்ககால நூல்களாகக் கருதப்படுபவை ! இவை கி.மு 500 தொடங்கி கி,பி 200 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை என அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளன !
கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே ஆரியர்களின் வருகை தமிழ்நாட்டுக்குள் நிகழ்ந்திருக்கிறது. களப்பிரர்கள் காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டை ஆண்ட பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தின் தான் தமிழ்நாட்டில் ஆரியர்களின் மேலாண்மை மிகுதியாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர் ! ஆனால் சங்க கால இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து மற்றும் கலித்தொகை போன்றவற்றில் ஆரியக் கருத்துகளும் வடமொழியின் தாக்கமும் எதிரொலிப்பது எப்படி ?
ஒரு சில பாடல் வரிகளைக் காண்போம் !
---------------------------------------------------------------------------------------
02).ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் (புறநானூறு.9)
03).ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ்யாறெனப்
...............பார்ப்பார் ஒழிந்தார்
படிவு. (பரி.திர.2:59)
04).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய (புறநாநூறு.2)
05). உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் (புறம்.182)
.................சூழ்ந்தாங்கு
11).கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை (புறம்.378)
18).நல் பனுவல் நால் வேதத்து (புறம்.15)
ஆரியர்களின் அறிமுகமான ஆலமர் கடவுள் (தெட்சணாமூர்த்தி), இந்திரன், இராமன், சீதை, தேவர் உலகம், மணிமிடற்று ஒருவன் (பரமசிவன்) நேமியோன் (திருமால்), பனைக்கொடியோன், நுதல் விளங்குமொரு கண் (பரமசிவன்), கந்தன் ஆகிய கடவுளர் பெயர்கள் புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது எப்படி?
ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ் இலக்கியங்களை எடுத்தெழுதிப் பதிப்பித்த பெரியோர்கள் பார்ப்பனர்களாகவோ அல்லது பார்ப்பனீய அடிமைகளாகவோ இருந்த காரணத்தால், ஆரியக் கருத்துகளை இடைச் செருகல்களாக்கித் தமிழ் இலக்கியத்தை மாசுப்படுத்திவிட்டனர் !
ஈரைம்பதின்மர் (கௌரவர்கள்), ஐந்தலை நாகம், ஐயிரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்), நால்வேதம், வேள்வி அந்தணர், தாலி களைதல், நெய்ம்மலி ஆவுதி, பாம்பு சேர் மதி (சந்திர கிரகணம்), வடமீன் கற்பு ஆகிய ஆரியர்களின் கருத்துகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது எப்படி ? இவையெல்லாம் தமிழ்ப் புலவர்களின் எழுத்தாணியிலிருந்து பிறந்த சொற்களா ? இருக்கமுடியாது ! எல்லாம் இடைச் செருகல்களே !
ஆரியர்களின் கான்முளைகளாகக் கருதப்படும் ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையில் “பார்ப்பனர்” என்னும் சொல் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி ? யாருடைய திருவிளையாடல் இது ? பார்ப்பனப் பெரியோர்களும், பார்ப்பனப் புலவர்களும் தமிழுக்குத் தொண்டு புரிவதைவிட, தமது கருத்துகளை ஓலைச்சுவடிகளாக இருந்த தமிழ் இலக்கியங்களை எடுத்தெழுதிப் பதிப்பிக்கையில் இடைச் செருகல்களாகத் திணிப்பதிலேயே மிகுந்த கவனம் செலுத்தி இருக்கின்றனர் !
வேறு எந்தப் பிரிவினரையும், எடுத்துக் காட்டாக “சத்திரியர்”, “வைசியர்”, “சூத்திரர்” ஆகியோரைக் குறிக்கும் எந்தச் சொல்லும் புறநானூற்றில் காணப்படாத போது “பிராமணர்”களைக் குறிக்கும் “பார்ப்பனர்” என்ற சொல் மட்டும் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி? இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ? பார்ப்பனப் பெரியோர்களும், பார்ப்பனப் புலவர்களும் தமிழுக்கு நன்மை செய்ததை விடப் பெரும் தீங்கே செய்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது !
பத்துப் பாட்டு நூல்களான, திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. இவற்றிலும் ஆரியக் கலப்பு , பெருவாரியாக இருக்கின்றன !
----------------------------------------------------------------------------------------
1).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்.415.)
----------------------------------------------------------------------------------------
திருமுருகாற்றுப்படை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இலக்கியம். இதில் தான் திருமால், சிவன், இந்திரன், பிரம்மா, பார்ப்பனர் பற்றிய குறிப்புகள் வருகின்றன !
---------------------------------------------------------------------------------------
(01) புள் அணி நீள் கொடிச் செல்வன் ( திருமால்),
(02) உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் (சிவன்),
(03) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் (இந்திரன்),
(04) நான்முக ஒருவற் சுட்டி (பிரம்மா)
(05) ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் (பார்ப்பனர்)
----------------------------------------------------------------------------------------
சங்க கால நூல்களில் தொடங்கி இன்று வரை ஆரியர்களின் மேலாளுமை முனைப்பாக இருந்தே வருகிறது. தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தமிழர்கள் மீது திணிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட - எடுத்துக் கொண்டிருக்கும் படைக்கலம் (ஆயுதம்) தான் ‘”கடவுள்” “பக்தி”, “சடங்குகள்” போன்றவை !
கடவுளின் பெயரால், ஆயிரக்கணக்கான கடவுள் வடிவங்களின் பெயரால் - புனைந்து உலவ விடப்பட்ட கட்டுக் கதைகளின் விளைவாக - அவற்றைத் தமிழர்களின் மீது திணித்து அவர்களை நம்பவைத்து விட்ட ஆரியர்களின் திருவிளையாடல்களின் விளைவாக, தமிழ் நாட்டில் மாந்தர்களின் பெயர்களெல்லாம் “வடமொழி:”ப் பெயர்களாகவே இருக்கின்றன !
மாந்தர்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டது ஆரியம். இது புரியாமல் நாம் இன்னும் தெருக்கள் தோறும் பிள்ளையார் கோயில் கட்டுவதிலும், அந்தக் கோயிகளுக்குப் பூசாரியாகப் பார்ப்பனர்களை அமர்த்துவதிலும் முனைப்பாக அக்கறை செலுத்தி வருகிறோம். ஆரியத்துக்கு அடிமைப்பட்டு, வடமொழிப் பெயர்களாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம் !
தமிழன் விழிப்பது எப்போது ? ஆரியத்தின் பிடியிலிருந்து தமிழ் மீட்சி பெறுவது எப்போது ?
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]
{01-06-2022}
---------------------------------------------------------------------------------------