எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 27 மார்ச், 2022

தமிழ் (03) மங்கிவரும் தமிழுணர்வு (பகுதி 03)

இஃதென்ன வெட்கக் கேடான செயல் !

 

நாம் வாழும் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு; நமது ஆட்சி மொழி தமிழ்; ஆனால் அனைத்து அதிகாரிகளின் பெயரும் அவர்களது அலுவலகங்களின் பெயரும் ஆங்கிலத்தில் வைக்கப்பெற்று பின்னர் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகிறது ! இஃதென்ன வெட்கக் கேடான செயல் !

 

நமது தாய்மொழி தமிழ்; நமது  இல்லத்தில் புழங்குவது  தமிழ்; ஆனால் நாம் எழுத்திலும் பேச்சிலும் இடையறாது பயன்படுத்துவது ஆங்கிலம் ! என்ன இழிவான துன்பியல் முரண்பாடு !

 

நாம் ஏன் தமிழுணர்வு இல்லாத பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் வாழ்கிறோம் ? தாயை எவனாவது  பழித்துவிட்டால் அவன்  தலையைக்  கொய்திடத் துடிக்கிறோம்; ஆனால் தாய்மொழியாம் தமிழைச் சீரழிக்கின்ற திரைத்துறை, தொலைக்காட்சி ஊடகத் துறை, செய்தித் தாள் துறையினருக்கு விழா எடுத்து விருதுகள் வழங்கிப் புளகாங்கிதம் அடைகிறோம் ! இஃதென்ன நேர்மையற்ற பண்பாடு !

 

நம் தன்மான உணர்வு எங்கே போயிற்று ? தெருவில் கொட்டிக் கிடக்கும் குப்பை கூளங்களாக ஏன் இழிந்து போனோம் ? நம் நிலை தாழ்ந்து போனதற்குக் காரணம் என்ன ? அல்லது யார் காரணம் ? எப்போதாவது சிந்தித்து நம்மைச் சீர்திருத்திக் கொள்ள முயன்று இருக்கிறோமா ?

 

அரசின் கல்வித் திட்டமானது, இளநிலை அகவையினரையும் இடைநிலை அகவையினரையும் தாய்மொழியின் பால் ஆர்வம் இல்லாத அல்லுயிர்ப் பொருள்களாக (ஜடம்)  ஆக்கிவருகிறது  ! தாய்மொழிப் பற்றும் பெருமித உணர்வும் இல்லாத பீழைபிடித்த உருட்டுக் கற்களாக  உருவாக்கி வருகிறது !

 

தாய்ப்பால் எப்படி ஒரு குழந்தையை வலுவுள்ளதாக உருவாக்குகிறதோ, அதுபோன்றே தாய்மொழிக் கல்வியும் இளஞ் சிறார்களை, சிந்தனைத் திறன் மிக்க செம்மல்களாக உருவாக்குகிறது என்னும் அடிப்படை கூடத் தெரியாத அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடம் கல்வித் துறை சிக்கிக் கொண்டுச்  சீரழிந்து வருகிறது !

 

தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழ் தான் நமது ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றிக் கொண்டு , ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகளைத் திறக்க இசைவளித்து ஆணை வழங்குதல் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ! பண்பாட்டுக்குப் புறம்பானது !

 

ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் பதின்மப் பள்ளிகளையும், நடுவணரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டப் பள்ளிகளையும் திறந்து நடத்தும் கல்வி வணிகர்களின் செயல் அதுவும் தமிழன் என்று கூறிக் கொண்டு நடமாடிவரும் பேராசைக்காரர்களின் பித்துக்கொளிச் செயல் - பெற்ற தாயைக் கொலை செய்வதற்கு ஒப்பானது !

 

ஏனிந்த சூழ்நிலை நிலவுகிறது ? தமிழர்களே தமிழ் வழிக் கல்விக்கு எதிராகச் செயல்படுவது ஏன் ? அரசும் அமைச்சர்களும் ஆங்கிலவழிக் கல்விக்கு உறுதுணையாகச் செயல்படுவது ஏன் ? அனைத்து வினாக்களுக்கும் விடை ஒன்று தான் ! தமிழர்களிடையே தமிழுணர்வு மங்கிப் போய்விட்டது ! தமிழைப் பற்றிய அக்கறை செத்துப் போய்விட்டது ! இந்நிலை எப்போது மாறும் ? எப்படி மாறும் ? இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

 

கலைக் கல்லூரிகளில் படிப்பவர்களில் பெரும்பான்மையோர், தமிழக அரசுப் பணியிலோ, தமிழக அரசின் ஆளுமையின் கீழ்ச் செயல்படும் மின்வாரியம், போக்கு வரத்துத் கழகம், நுகர் பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பல்கலைக் கழகங்கள் போன்ற அமைப்புகளிலோ பணியில் அமர விரும்புபவர்கள். எஞ்சியோர் சொந்தத் தொழில் தொடங்கி  நடத்த விரும்புபவர்கள். இவர்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்தால் போதுமானது !

 

கணித ஆசிரியராக வருகின்ற  வாய்ப்பு சில ஆயிரம் பேருக்கு மட்டுமே  இருக்கையில் நூறாயிரக் கணக்கான மாணவர்களுக்கு (a + b) (a – b) = ? என்று கணிதப் பாடத்தை வலுக் கட்டாயமாகத் திணிப்பது  தவறான கொள்கையல்லவா  ?

 

சில ஆயிரம் பேர் மட்டுமே வேதியியல் அல்லது இயற்பியல் அல்லது பயிரியல் அல்லது விலங்கியல் ஆசிரியராக அமர்வு பெற முடியும் என்ற நிலையில், நூறாயிரக் கணக்கான  மாணவர்களை வேதியியலும், இயற்பியலும், பயிரியலும், விலங்கியலும் படிக்கச் சொல்லி வல்லுணர்வுடன் திணிப்பது அறிவுடைமை ஆகுமா ?

 

கணிதவியல், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உளவியல், அளவையியல், என்று என்னென்னவோ பாடங்களை எல்லாம் திணித்து, தமிழ் படிக்கும் பாட வேளைகளைக் குறைத்துவிட்ட தமிழக  அரசின் கல்விக் கொள்கையே, தமிழ் வளர்ச்சிக்குப் பெருங் கேடாக அமைந்துவிட்டது !  போதுமான அளவுக்கு முனைப்பாகவும், ஆழமாகவும், உள்வாங்கியும்  தமிழ் படிக்காததால், தமிழ் மீது பற்றும் குறைந்துவிட்டது; தமிழ் உணர்வும் அருகிப் போய்விட்டது !

 

மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி, தமிழ்ப் பற்றை  ஊதிப் பெருக்க வேண்டுமென்றால், இப்போதுள்ள கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே 70 % மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். எஞ்சிய 30 மாணவர்கள் தாம் விரும்பும் பிற பாடங்களில் ஏதாவதொன்றை எடுத்துப் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் !

 

ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரியத் தமிழும் ஆங்கிலமும் போதாதா ? ஒரு மாநகராட்சியில் பணிபுரிய இயற்பியலும், வேதியியலும், உளவியலும் தேவைதானா ?

 

ஆகவே, சில முதன்மையான சீர்திருத்தங்களை  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழும் வளர்ச்சி பெறும்; தமிழுணர்வும் எழுச்சி பெறும். இதன் தொடர்பாகச் சில கருத்துருக்களை முன் வைக்கிறேன். அவை வருமாறு :-

 

(01) அரசுக் கலைக் கல்லூரிகளில் 75 % கல்லூரிகளைத் தமிழை முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலத்தைத் துணைப்பாடமாகவும் கற்றுத் தரும் வகையில் தமிழ்க் கல்லூரிகளாக மாற்ற வேண்டும். இக்கல்லூரிப் பாடத் திட்டத்தில் வேறு பாடப்பிரிவுகள் எதுவும் இருக்கலாகாது !

 

(02) தமிழை மட்டுமே சொல்லித் தரும் செந்தமிழ்க் கல்லூரிகள்  ஒவ்வொரு மாவட்டத்திலும்  மாவட்டத்திற்கு ஐந்து வீதம் அரசின் சார்பில் தொடங்கப்பட வேண்டும். இங்கு ஐந்து ஆண்டுகள் படித்து புலவர்பட்டம் பெறுபவர் மட்டுமே பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் !

 

(03) அரசின் செந்தமிழ்க் கல்லூரிகளில் ஐந்து ஆண்டு புலவர் பட்டப் படிப்புடன் மேலும் மூன்று ஆண்டுகள் படித்து பேராசிரியர்பட்டம் பெற்றவர் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக அமர்வு செய்யப்பட வேண்டும் !

 

(04) அரசின் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பேராசிரியர் பட்டம் பெறுவதுடன், தமிழ் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து செய்தித் தாளில் தொடர் கட்டுரை வெளியிட  வேண்டும். இதற்காக அரசு தனியாக ஒரு செய்தித் தாள் வெளியிட வேண்டும்.  அத்துடன் தமிழ் மரபுக்கேற்ப  100 புதிய சொற்களையும் புனைந்து  25 கல்வியாளர்கள் சூழ்ந்த திறந்த வெளி அரங்கில் அரங்கேற்றம் செய்ய வேண்டும். அவர்களது வினாக்களுக்கு விடையளித்துத் தேர்ச்சியும் பெறவேண்டும். இவர்களுக்கு மட்டுமே முனைவர் பட்டம் அளித்து பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பனியமர்த்தம் செய்ய வேண்டும் !

 

(05) அரசின் தமிழ்க் கல்லூரி அல்லது செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் மட்டுமே அரசு அலுவலகங்களில் பணி அமர்வு செய்யப்பட வேண்டும் !

 

(06) அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் சொல்லித் தரும் பதின்மப் பள்ளிகள் உள்பட எந்தப் பள்ளியாயினும் அவை தடை செய்யப் பெற வேண்டும்.

 

(07) விளம்பரப் பலகைகளில் பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொற்கள் மட்டுமே இருத்தல் வேண்டும் !

 

(08) தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் அறிவிக்கப் பெற்றிருப்பதால், தமிழைச் சீரழிக்கும் வகையில் எழுதுதல் ஒறுப்புக் குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் !

 

(09) திரைப்படத் துறை, தொலைக்காட்சித் துறை ஆகியவற்றின் படைப்புகள்  தமிழறிஞர்களைக் கொண்ட தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கும் நிலை வரவேண்டும் !

 

(10) வடமொழி வளர்ப்புக்காகவே உருவான கணியம் (சோதிடம்) தடை செய்யப்பட வேண்டும்.

 

(11) திருக்கோயில்கள் தமிழ்ப் புலவர்கள் ஐவர் அடங்கிய குழுவின் ஆளுகைக்கு உட்படுத்தப்படவேண்டும் !

 

இத்தகைய சீர்திருத்தங்களைத் தமிழக அரசு மேற்கொண்டால், தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சி மேலோங்கும்; மக்களிடையே தமிழுணர்வும் தழைத்தோங்கும்; தமிழ் தான் தமிழ் நாட்டரசின் ஆட்சி மொழி என்பதற்கு முழுமையான மதிப்பும் அப்போது தான் கிடைக்கும் !

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 13]

{27-03-2022}

 -----------------------------------------------------------------------------

தமிழ் (02) மங்கிவரும் தமிழுணர்வு (பகுதி 02)

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும்  இல்லை;   அப்பழுக்கற்ற  தமிழுணர்வும் இல்லை !

 

தாய் மீது எத்துணைப் பற்று வைத்து இருக்கிறோமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவிற்குத் தாய்மொழி மீதும் பற்று இருத்தல் வேண்டும். ஏன் அப்படி ? பெற்ற தாய் நமக்கு உருக்கொடுத்து, உயிரூட்டி இவ்வுலகில் உலவச் செய்தவள். தாய் இல்லையேல் நாம் இந்த உலகில் பிறந்திருக்கவே முடியாது !

 

தாய்மொழி, இந்த உலகத்தை நமக்கு அடையாளம் காட்டிய ஒளிவிளக்கு; நமது அறிவுக் கண்களைத் திறந்து வைத்த ஊடகம்.  நாம் விலங்குகளாக வாழாமல் அறிவை ஊட்டி வளர்த்து  அறிவுடைய மனிதனாக நம்மை உயர்த்தி இருப்பது தாய்மொழி !

 

தாயையும், தமிழையும் மதிக்காதவன் தமிழனாக இருக்க முடியாது ! அத்தகையவன் விலங்கினும் கீழ்மையான ஈனப் பிறவி ! தாயை போற்றாத இழிபிறவிகளையும் காண்கிறோம்; தமிழை மதிக்காத ஈனப் பிறவிகளையும் காணமுடிகிறது ! ஏன் இந்த நிலை ?

 

நூறாண்டுகளுக்கு முன்பு திண்ணைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒரேயொரு ஆசிரியர், ஐந்தாறு மாணவர்களுக்குத் தமிழையும் கணிதத்தையும்  சொல்லிக் கொடுப்பார். அப்போது தமிழை ஆழமாகக் கற்றுத் தந்தனர். தமிழைக் கற்றுத் தந்ததுடன் தமிழ் உணர்வையும் சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டி வந்தனர் ! திண்ணைப் பள்ளிகளில் படித்த பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், போன்றோர் தமிழ் உணர்வாளர்களாக இருத்தமைக்கு இதுவே காரணம் !

 

திண்ணைப் பள்ளிகள் மெல்ல மெல்ல மறைந்து தொடக்கப் பள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின. இங்கும் தமிழ் செப்பமுறக் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம், வரலாறு, புவியியல், பயிரியல், விலங்கியல் என்று பாடத் திட்டம் விரிவாகாதக் காலம்; தமிழ்ப் பாடங்களுடன், தமிழில் பலுக்குதலும் (உச்சரித்தல்) முறையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டன !

 

தொடக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் பல்கிப் பெருகிய அதே நேரத்தில், செந்தமிழ்க் கல்லூரிகளும் தோன்றி தமிழை முனைப்பாகக் கற்றுத் தரத் தொடங்கின. சைவத் திருப்பணி மடங்களும் தமிழ்க் கல்லூரிகளைத் தொடங்கி, தமிழில் புலவர் பட்ட வகுப்புகளை நடத்த முனைந்தன !

 

இவ்வகையில், தருமபுரம் திருமடம், திருவாவடுதுறைத் திருமடம், திருப்பனந்தாள் திருமடம், பேரூர் திருமடம், போன்றவை தமிழ்க் கல்லூரிகளைத் தொடங்கி, மாணாக்கர்களைத் தமிழில் வல்லமை மிக்க புலவர்களாக உருவாக்கின. திருவையாற்றில் அரசர் கல்லூரியும், தஞ்சாவூர், கரந்தையில் தமிழ்ச் சங்கக் கல்லூரியும், தமிழ்ப் புலவர் பட்ட வகுப்புகளைத் தொடங்கி நடத்தின !

 

மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும் மாணாக்கர்களுக்குத் தமிழறிவைப் புகட்டுவதில் முன்னணியில் இருந்துவந்தன. தமிழ் நாடெங்கும் பல தனியார் அமைப்புகளும் செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்தி வரலாயினர் ! இத்தகைய தமிழ்க் கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்  ஆசிரியர்களாகப் பணியில் அமர்ந்து, தமது மாணவர்களுக்குத் தமிழைத் துளக்கமறக் கற்றுத் தந்ததுடன், தமிழில் ஆர்வத்தையும், உணர்வையும் ஊட்டி வந்தனர் !

 

கி.பி.1940 முதல் 1970 வரைத் தமிழகத்தில் தமிழுணர்வு உச்சநிலையில் ஒளிவிட்டு இலங்கியமைக்குக் காரணம் தமிழ்க் கல்லூரிகளும், அங்கு பயின்று வித்வான்”, ”புலவர்”  பட்டம் பெற்று ஆசிரியர்களாக அமர்வு பெற்ற தமிழாசிரியர்களுமே என்றால் அது மிகையாகாது !

 

பின்னர், சைவத் திருமடங்கள் தன் கருத்தைத் தமிழை விட்டு முற்றிலுமாக விலக்கி ஆரியத்திற்கு அடிமைப்பட்டு, முழுக்க முழுக்கத் திருக்கோயில்கள் பக்கம் திருப்பலாயினர். இதன் விளைவாக தமிழ்க் கல்லூரிகளை மூடினர் அல்லது வருமானம் ஈட்டும் வகையில் கலைக் கல்லூரிகளாக மாற்றினர். செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்தி வந்த பிற அமைப்புகளும், தனியாரும் அக்கல்லூரிகளைக் கலைக் கல்லூரிகளாக மாற்றத் தொடங்கினர் !

 

கலைக் கல்லூரிகளில் தமிழ் ஆழமாகக் கற்றுத் தருவது நீர்த்துப் போயிற்று. தமிழுடன் தேவையற்ற பிற பாடங்களையும் பாடத் திட்டத்தில் சேர்த்து, தமிழில் புலமை பெறும் வாய்ப்பினைத் துப்புரவாக  அடைத்துவிட்டனர்.  கலைக் கல்லூரிகளில் தமிழ் படித்துப் பட்டம் பெற்று வெளியில் வருவோர் போதிய தமிழறிவு இல்லாதவர்களாகவும், தமிழுணர்வு அற்றவர்களாகவுமே இருந்தனர்; இருக்கின்றனர் !

 

இதற்கு அடுத்ததாகபள்ளி இறுதி வகுப்பு முடித்து, இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து (SECONDARY GRADE TEACHER) அஞ்சல் வழியில் கலையியல் வாலை (B.A), இலக்கிய வாலை (B.Lit), கலையியல் மேதை (M.A) போன்ற பட்டங்களைப் பெற்றுத் தமிழாசிரியராகப் பணி மாற்றம் அடைந்து  பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலை உருவாகியது !

 

அஞ்சல் வழிக் கல்வியின் தரம் அகழிக்குள் (அதல பாதாளத்தில்) வீழ்ந்து கிடக்கையில், பணிமாற்றம் பெற்றுத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் தமிழாசிரியர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் ? அவர்களிடம் தமிழுணர்வு பொங்கி வழிந்திடுமா என்ன ?

 

கலையியல் மேதை (M.A), மெய்யியல் மேதை (M.Phil) போன்ற பட்டங்களை எப்படியோ பெற்று, யாரோ எழுதிக் கொடுக்கும் ஆய்வுக் கட்டுரையைத் (THESIS) தன்னுடையதாக்கிக் காட்டி, பெயரளவுக்கு நடக்கும் வாய்மொழித் தேர்விலும் எளிதாகத் தடை கடந்து முனைவர் பட்டம் (Ph.D) பெறும் ஒருவர், கல்லூரியில் பயிற்றுவிப்புப் பணியை ஏற்கும் நிலை நிலவுகையில், அவரிடம் ஆழ்ந்த தமிழ்ப் புலமையையோ, தமிழுணர்வையோ எப்படி எதிர்பார்க்க முடியும் ?

 

தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும் இல்லை; அப்பழுக்கற்ற தமிழுணர்வும் இல்லை. பணியில் சேர்ந்த பிறகாவது தமது ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் உந்துதலும் கிடையாது., அவர்களிடம் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டும் அவை இருந்துவிடுமா என்ன ?

 

கடந்த சில பத்தாண்டுகளாக (FEW DECADES) தமிழகத்தில் தமிழின் நிலையில் சீரழிவு ஏற்பட்டமைக்கும், பெரும்பாலான இளநிலை, இடைநிலை அகவையினரிடம் தமிழுணர்வு அற்றுப் போனமைக்கும், காரணம் தமிழ் கற்பிக்கும் பணியை முனைப்பாகவும் முறையாகவும் திறம்படவும் செய்யாத தமிழாசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களுமே என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை !

 

யாரையும் குற்றம் குறை சொல்வதற்காக, இக்கட்டுரை வடிக்கப் பெறவில்லை ! தமிழர்களாகிய நாமே தமிழின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கிறோமே என்னும் மனத் துன்பத்தின் வெளிப்பாடாக இதைக் கருதுங்கள் !

----------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedareththinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[தி.ஆ: 2053,  மீனம் (பங்குனி) 13]

{27-03-2022}

-------------------------------------------------------------------------------

தமிழ் (01) மங்கிவரும் தமிழுணர்வு (பகுதி 01)

 

மக்களிடையே தமிழுணர்வு  இருக்கிறதா ?

 

தமிழகத்தில் இளைய தலைமுறையினரிடம் தமிழுணர்வு இருக்கிறதா என்றால் இல்லைஎன்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, தமிழிலேயே பேசி வளர்ந்த இவர்களுக்குத் தமிழுணர்வு மட்டும் எப்படி  இல்லாமற் போய்விட்டது ? இதைப்பற்றிச் சற்று ஆய்வு செய்வோம் !

 

பள்ளிப் பருவத்தில் உள்ள இளைஞர்களின் மனம், கொழுகொம்பு தேடிக் காற்றில்  அலையும் முல்லைக் கொடி போன்றது. அவர்களை ஈர்க்கும் புறத் தூண்டல் (EXTERNAL STIMULATION) எதுவாயினும், அது நல்லதோ கெட்டதோ,  அதைப் பற்றிக்கொள்ள அவர்கள் மனம் அலைபாயும் !

 

உடன் பயிலும் மாணவர்களின் பழக்க வழக்கங்கள், புறத் தூண்டல்களில் ஒன்று. அவர்கள் மடல்  விளையாட்டு (CRICKET MATCH) பற்றி விவரித்தால் அஃது இவர்களையும் தொற்றிக் கொள்ளும். திரையுலகத் தாரகைகள் (FILM STARS) பற்றிய புகழுரைகள்  நிகழ்த்தப்பட்டால், இவர்களும் அதற்கு அடிமையாகிப் போவார்கள் !

 

இந்தப் பருவத்தில் தமிழின் அருமை பெருமைகள் பற்றி ஆசிரியர்கள் சுவைபட  எடுத்துச் சொன்னால், அவர்களுக்குத் தமிழின்பால் ஈர்ப்பு தன்னெழுச்சியாகவே வந்துசேரும் !

 

இக்காலத்தில் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையில் நிறைவு  இருக்கிறதா என்றால் இல்லைஎன்று தான் சொல்ல வேண்டியுள்ளது. முதலில், தமிழாசிரியர்களின் கல்வித் தகுதி பற்றி ஆய்வு செய்வோம் !

 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தமிழுக்கெனவே கல்லூரிகள் பல இருந்தன. இங்கு தமிழ் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. இலக்கியங்கள் பற்றிய மொழியறிவு மாணவர்களுக்கு நிறைவாகப் புகட்டப்பட்டது.  இலக்கணம்  ஐயம் திரிபறச் சொல்லித் தரப்பட்டது. யாப்பிலக்கணம், அணியிலக்கணம் அனைத்தும் கற்றுத் தேர்ச்சி பெற்று தமிழில் வல்லமையும் புலமையும் பெறுகின்ற வாய்ப்பு இக்கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக இருந்தது !

 

இக்கல்லூரிகளில் ஈராண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வித்வான்  பட்டமும், நான்காண்டுகள் படித்துத் தேர்ச்சி  பெறுவோருக்கு புலவர்பட்டமும் வழங்கப்பட்டது. வித்வான் பட்டம் பெற்றோர் பள்ளிகளில் 6 , 7,  8 –ஆம் வகுப்புகளில்  தமிழ்ப் பாடம் கற்பித்தனர். புலவர் பட்டம் பெற்றோர் 9, 10, 11 –ஆம் வகுப்புகளில் தமிழ்ப் பாடம் கற்பித்தனர் !

 

தமிழில் ஆழமாகவும், அகலமாகவும் படித்துப் பட்டம் பெற்ற இத்தகைய ஆசிரியப் பெருமக்கள், அவர்களுக்கிருந்த இயல்பான தமிழ்ப் புலமையின் காரணமாக, பாடம் சொல்லிக் கொடுத்ததுடன், தமிழ் உணர்வையும் மாணவர்களிடம் ஊட்டி வளர்த்தனர் !

 

மாணவர்களின் ஆர்வத்தைக் கிளறிவிடும் வகையில் தமிழாசிரியர்களின் கற்பித்தல் முறை இருந்தது. எதுகை மோனையுடன் மாணவர்களிடம் உரையாடி, தானும் அவ்வாறு பேச வேண்டும் என்ற உந்துதலை அவர்களிடம் ஏற்படுத்தினர் !

 

உரையாடலுக்கு இடையே புறநானூறு, கலிங்கத்துப் பரணி, திருவருட்பா போன்ற இலக்கியங்களிலிருந்து சில வரிகளையும் பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல் வரிகளையும் இணைப்புரையாகச் சொல்லி அந்தக் பாடல் வரிகளின் தாக்கம்  மாணவர்களிடம் ஏற்படச் செய்தனர். சுருங்கச் சொன்னால், தமிழாசிரியர் வகுப்பு எப்போது வரும் என்ற ஏக்கத்தை மாணவர்களிடம் செழித்து வளரச் செய்தனர் !

 

உள்ளீடு (INPUT) வளமாக இருந்ததால், அக்காலத் தமிழாசிரியர்களின் வெளியீடும் (OUTPUT) செழிப்பு மிக்கதாக இருந்தது. செழிப்பு மிக்க கற்பித்தல் மாணவர்களிடம் தமிழுணர்வைச் சுடர்விட்டு ஒளிரச் செய்தது. மாணவப் பருவத்தில் ஏற்பட்ட தமிழார்வமும், தமிழுணர்வும், முதுமைப் பருவம் வரை  அவர்களிடம் தணலாகத் தகித்துக் கொண்டிருந்தது !

 

இன்றைய தமிழாசிரியர்கள் நிலையென்ன ? இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேரும் ஒருவர் இலக்கிய வாலை (B.LIT) படிப்பை அஞ்சல் வழியில்  படித்து 40 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும்; பட்டதாரித் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று விடலாம்.  அஞ்சல் வழியாகவே கலையியல் மேதை (M.A) படிப்பை முடித்துப் பட்டமும் பெற்று, அஞ்சல் வழியாகவே கல்வியியல் வாலை (B.Ed) பட்டமும் பெற்றுவிட்டால் முதுகலை ஆசிரியர் என்ற பதவி உயர்வும் 11, 12 –ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது !

 

ஆசிரியரிடம் நேரடியாகத் தமிழ் பயில்வதற்கும், அஞ்சல் வழியில் தமிழ் படிப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. அஞ்சல் வழியில் படிப்பவருக்கு புறநானூறு என்பதற்கு இலக்கணக் குறிப்பு யாதென்று ஐயம் ஏற்பட்டால் யாரிடம் போய்க் கேட்க முடியும் ? நேரடியாக ஆசிரியரிடம் தமிழ் பயிலும் போது புறநானூறு என்பதற்கு இலக்கணக் குறிப்பு, ”இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைஎன்பதைக் கேட்டறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. நேரடிப் பயிலலுக்கு இணையாக அஞ்சல் வழிப் பயிலலில் ஆழமுமில்லை; அகலமும் இல்லை ! 

 

அஞ்சல் வழியில் படித்துத் தமிழசிரியராகப் பணி புரியும் மிகப் பெரும்பான்மையோரிடம் தமிழில் போதிய புலமையும் இல்லை; தமிழ் ஆர்வமும் இல்லை; தமிழ் உணர்வும் இல்லை. கல்லூரியில் இலக்கிய வாலை (B.Lit) அல்லது தமிழில் கலையியல் மேதை (M.A) பட்டம் பெற்றுத் தமிழாசிரியராகப் பணி புரிவோரிடமும் தமிழ்ப் புலமை குறைவாகவே இருக்கிறது; தமிழ் ஆர்வமும் நிறைவாக இல்லை; தமிழுணர்வு போதுமானதாக இல்லை. இதற்குக் காரணம் உள்ளீடு (INPUT) செழுமையாக இல்லை; எனவே வெளியீடும் (OUTPUT) வளமாக இல்லை !

 

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் உள்ள இக்குறைபாடே இக்கால மாணவர்களிடம் தமிழார்வமும், தமிழ்ப்புலமையும், தமிழுணர்வும் இல்லாமற் போனமைக்கு முழுமுதற் காரணமாகும் !

 

வளரும் தலைமுறையினரிடம்  தமிழார்வமும், தமிழ்ப் புலமையும், தமிழுணர்வும் சுடர்விட்டு ஒளிர வேண்டுமானால், மீண்டும் தமிழ்க் கல்லூரிகள்  பல இடங்களில் தொடங்கப்பட வேண்டும். இங்கு தமிழ் மட்டுமே ஆழமாகவும் அகலமாகவும் சொல்லித் தரப்படவேண்டும்.  இங்கு பயின்று தமிழில் புலவர்பட்டம் பெறுவோர் மட்டுமே தமிழாசிரியர்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும் !

 

இப்போது தமிழாசிரியர்களாகப் பணிபுரிவோர் தமிழ்க் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளாவது படித்து புலவர்பட்டம் பெற்ற பின்பே கற்பிக்கும் பணி அளிக்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளித்து  தமிழ்க் கல்லூரிகளில் சேர்ந்துப் பயின்றிட ஆணை வழங்க வேண்டும். இத்தகைய செயற்பாடு ஒன்றே தமிழ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு உரமளிப்பதாக அமையும் !

 

தமிழ் ஆர்வலர்கள் இதைக் கோரிக்கையாக அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்வார்களாக ! தமிழ்நாடு அரசுஎன்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழித் தோன்றல்கள் எம்முடைய அரசு தமிழ் நாடு அரசுமட்டுமல்ல, ”தமிழ் வளர்ச்சியை நாடும் அரசும் கூட என்று  நூற்றுக்கு நூறு சொல்லிலும் செயலிலும் காண்பிக்க வேண்டிய தருணமும் இதுவே !

 

இதை நிறைவேற்றித் தரும் அரசுக்குத் தமிழ் மீது பற்றும், ஆர்வமும், புலமையும் கொண்ட இலட்சக் கணக்கான தமிழ் நெஞ்சங்கள் அசைக்கமுடியாத ஆதரவினை நல்குவர் என்பது திண்ணம் !

----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 13]

{27-03-2022}

-----------------------------------------------------------------------------