தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும் இல்லை; அப்பழுக்கற்ற தமிழுணர்வும் இல்லை !
தாய் மீது எத்துணைப் பற்று வைத்து இருக்கிறோமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவிற்குத் தாய்மொழி மீதும் பற்று இருத்தல் வேண்டும். ஏன் அப்படி ? பெற்ற தாய் நமக்கு உருக்கொடுத்து, உயிரூட்டி இவ்வுலகில் உலவச் செய்தவள். தாய் இல்லையேல் நாம் இந்த உலகில் பிறந்திருக்கவே முடியாது !
தாய்மொழி, இந்த உலகத்தை நமக்கு அடையாளம் காட்டிய
ஒளிவிளக்கு; நமது அறிவுக் கண்களைத் திறந்து வைத்த
ஊடகம். நாம் விலங்குகளாக வாழாமல் அறிவை
ஊட்டி வளர்த்து அறிவுடைய மனிதனாக நம்மை
உயர்த்தி இருப்பது தாய்மொழி !
தாயையும், தமிழையும் மதிக்காதவன் தமிழனாக இருக்க
முடியாது ! அத்தகையவன் விலங்கினும் கீழ்மையான ஈனப் பிறவி ! தாயை போற்றாத
இழிபிறவிகளையும் காண்கிறோம்; தமிழை மதிக்காத ஈனப் பிறவிகளையும்
காணமுடிகிறது ! ஏன் இந்த நிலை ?
நூறாண்டுகளுக்கு முன்பு திண்ணைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஒரேயொரு
ஆசிரியர், ஐந்தாறு மாணவர்களுக்குத் தமிழையும்
கணிதத்தையும் சொல்லிக் கொடுப்பார்.
அப்போது தமிழை ஆழமாகக் கற்றுத் தந்தனர். தமிழைக் கற்றுத் தந்ததுடன் தமிழ்
உணர்வையும் சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டி வந்தனர் ! திண்ணைப் பள்ளிகளில் படித்த
பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள், போன்றோர் தமிழ் உணர்வாளர்களாக இருத்தமைக்கு இதுவே காரணம் !
திண்ணைப் பள்ளிகள் மெல்ல மெல்ல மறைந்து தொடக்கப் பள்ளிகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின. இங்கும் தமிழ் செப்பமுறக் கற்பிக்கப்பட்டது.
ஆங்கிலம், வரலாறு, புவியியல், பயிரியல், விலங்கியல் என்று பாடத் திட்டம் விரிவாகாதக் காலம்; தமிழ்ப் பாடங்களுடன், தமிழில் பலுக்குதலும் (உச்சரித்தல்)
முறையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டன !
தொடக்கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் பல்கிப் பெருகிய
அதே நேரத்தில், செந்தமிழ்க் கல்லூரிகளும் தோன்றி தமிழை
முனைப்பாகக் கற்றுத் தரத் தொடங்கின. சைவத் திருப்பணி மடங்களும் தமிழ்க்
கல்லூரிகளைத் தொடங்கி, தமிழில் புலவர் பட்ட வகுப்புகளை நடத்த
முனைந்தன !
இவ்வகையில், தருமபுரம் திருமடம், திருவாவடுதுறைத் திருமடம், திருப்பனந்தாள்
திருமடம், பேரூர் திருமடம், போன்றவை தமிழ்க் கல்லூரிகளைத் தொடங்கி, மாணாக்கர்களைத் தமிழில் வல்லமை மிக்க புலவர்களாக உருவாக்கின.
திருவையாற்றில் அரசர் கல்லூரியும், தஞ்சாவூர், கரந்தையில் தமிழ்ச் சங்கக் கல்லூரியும், தமிழ்ப் புலவர் பட்ட வகுப்புகளைத் தொடங்கி நடத்தின !
மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும் மாணாக்கர்களுக்குத்
தமிழறிவைப் புகட்டுவதில் முன்னணியில் இருந்துவந்தன. தமிழ் நாடெங்கும் பல தனியார்
அமைப்புகளும் செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்தி வரலாயினர் ! இத்தகைய தமிழ்க்
கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணியில் அமர்ந்து, தமது மாணவர்களுக்குத் தமிழைத் துளக்கமறக் கற்றுத் தந்ததுடன், தமிழில் ஆர்வத்தையும், உணர்வையும்
ஊட்டி வந்தனர் !
கி.பி.1940 முதல் 1970 வரைத் தமிழகத்தில் தமிழுணர்வு உச்சநிலையில் ஒளிவிட்டு
இலங்கியமைக்குக் காரணம் தமிழ்க் கல்லூரிகளும், அங்கு பயின்று “வித்வான்”, ”புலவர்” பட்டம் பெற்று ஆசிரியர்களாக அமர்வு பெற்ற தமிழாசிரியர்களுமே என்றால்
அது மிகையாகாது !
பின்னர், சைவத் திருமடங்கள் தன் கருத்தைத் தமிழை
விட்டு முற்றிலுமாக விலக்கி ஆரியத்திற்கு அடிமைப்பட்டு, முழுக்க முழுக்கத் திருக்கோயில்கள் பக்கம் திருப்பலாயினர். இதன்
விளைவாக தமிழ்க் கல்லூரிகளை மூடினர் அல்லது வருமானம் ஈட்டும் வகையில் கலைக்
கல்லூரிகளாக மாற்றினர். செந்தமிழ்க் கல்லூரிகளை நடத்தி வந்த பிற அமைப்புகளும்,
தனியாரும் அக்கல்லூரிகளைக் கலைக் கல்லூரிகளாக
மாற்றத் தொடங்கினர் !
கலைக் கல்லூரிகளில் தமிழ் ஆழமாகக் கற்றுத் தருவது நீர்த்துப்
போயிற்று. தமிழுடன் தேவையற்ற பிற பாடங்களையும் பாடத் திட்டத்தில் சேர்த்து,
தமிழில் புலமை பெறும் வாய்ப்பினைத்
துப்புரவாக அடைத்துவிட்டனர். கலைக் கல்லூரிகளில் தமிழ் படித்துப் பட்டம்
பெற்று வெளியில் வருவோர் போதிய தமிழறிவு இல்லாதவர்களாகவும், தமிழுணர்வு அற்றவர்களாகவுமே இருந்தனர்; இருக்கின்றனர் !
இதற்கு அடுத்ததாக, பள்ளி இறுதி வகுப்பு முடித்து, இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து (SECONDARY GRADE
TEACHER) அஞ்சல் வழியில் கலையியல் வாலை (B.A), இலக்கிய வாலை (B.Lit), கலையியல் மேதை (M.A)
போன்ற பட்டங்களைப் பெற்றுத் தமிழாசிரியராகப்
பணி மாற்றம் அடைந்து பாடம் சொல்லிக்
கொடுக்கும் நிலை உருவாகியது !
அஞ்சல் வழிக் கல்வியின் தரம் அகழிக்குள் (அதல பாதாளத்தில்) வீழ்ந்து
கிடக்கையில், பணிமாற்றம் பெற்றுத் தமிழ் சொல்லிக்
கொடுக்கும் தமிழாசிரியர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் ? அவர்களிடம் தமிழுணர்வு பொங்கி வழிந்திடுமா என்ன ?
கலையியல் மேதை (M.A), மெய்யியல் மேதை (M.Phil) போன்ற பட்டங்களை எப்படியோ பெற்று, யாரோ எழுதிக் கொடுக்கும் ஆய்வுக் கட்டுரையைத் (THESIS) தன்னுடையதாக்கிக் காட்டி, பெயரளவுக்கு
நடக்கும் வாய்மொழித் தேர்விலும் எளிதாகத் தடை கடந்து முனைவர் பட்டம் (Ph.D)
பெறும் ஒருவர், கல்லூரியில் பயிற்றுவிப்புப் பணியை ஏற்கும் நிலை நிலவுகையில்,
அவரிடம் ஆழ்ந்த தமிழ்ப் புலமையையோ, தமிழுணர்வையோ எப்படி எதிர்பார்க்க முடியும் ?
தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த தமிழறிவும் இல்லை;
அப்பழுக்கற்ற தமிழுணர்வும் இல்லை. பணியில்
சேர்ந்த பிறகாவது தமது ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் உந்துதலும்
கிடையாது., அவர்களிடம் பயிலும் மாணாக்கர்களிடம்
மட்டும் அவை இருந்துவிடுமா என்ன ?
கடந்த சில பத்தாண்டுகளாக (FEW DECADES) தமிழகத்தில் தமிழின் நிலையில் சீரழிவு ஏற்பட்டமைக்கும், பெரும்பாலான இளநிலை, இடைநிலை அகவையினரிடம் தமிழுணர்வு
அற்றுப் போனமைக்கும், காரணம் தமிழ் கற்பிக்கும் பணியை
முனைப்பாகவும் முறையாகவும் திறம்படவும் செய்யாத தமிழாசிரியர்களும், தமிழ்ப் பேராசிரியர்களுமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !
யாரையும் குற்றம் குறை சொல்வதற்காக, இக்கட்டுரை வடிக்கப் பெறவில்லை ! தமிழர்களாகிய நாமே தமிழின்
சீரழிவுக்குக் காரணமாக இருக்கிறோமே என்னும் மனத் துன்பத்தின் வெளிப்பாடாக இதைக்
கருதுங்கள் !
----------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(vedareththinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 13]
{27-03-2022}
-------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக