அலுவலகப்
பணிகளில் தமிழைக் கட்டாயமாக்கி 62 ஆண்டுகள் ஆகின்றன !
தமிழக அரசின்
கல்வி அமைச்சராக இருந்த மறைந்த திரு.சி.சுப்ரமணியம் அவர்கள் சட்ட மன்றத்தில்,
தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை 1956 –ஆம் ஆண்டின் XXXiX எண் சட்டமாக, கொண்டுவந்து நிறைவேற்றினார். இச் சட்டப்படி, அரசு அலுவலகங்களில் தமிழில்
கடிதப் போக்கு வரவு 14-01-1958 முதல் நடைபெற வேண்டும் என்று
அறிவிக்கை வெளியிடப் பெற்றது !
அன்னைத் தமிழ்
ஆட்சி மொழியாகி 64 ஆண்டுகள் ஆகின்றன. அலுவலகப் பணிகளில்
தமிழைக் கட்டாயமாக்கி 62 ஆண்டுகள் ஆகின்றன .ஆனால், அரசு ஆணைகள் வெளியீடு, கோப்புகள்
பேணுதல், கடிதங்கள் அனுப்புதல், ஒப்பந்தப் புள்ளிகள் கேட்பு, முன்னீடு
அறிவிப்புகள் (TENDER NOTICES), நிலக் கையகப் படுத்தல் போன்ற அனைத்துப்
பணிகளும் 100% தமிழில் நடைபெறுகின்றனவா என்றால்
இல்லை !
புதிதாக
உருவாக்கப்படும் துறைகள், துறைத் தலைமை அலுவலர் பணியிடங்கள்,
சார்நிலை அலுவலர் பணியிடங்கள் போன்றவற்றின் பெயர்கள்
முதலில் ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்டு, பின்பு தான்
தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன ! தமிழில் சிந்தித்து, தமிழிலேயே பணியிடங்கள் உருவாக்கப்படும் நிலை வரவேண்டும் !
தமிழ் வழிக்
கல்வித் திட்டம் என்னும் இலக்கு
முடமாக்கப்பட்டு, ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளிகள்
பல்லாயிரக் கணக்கில் பெருகிவிட்டன. அரசுப் பள்ளிகளில் கூட ஆங்கில வழிக் கல்வி
வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளிலும் ஆங்கிலம்
சொல்லித் தரப்படும் நிலை உருவாகியுள்ளது !
தமிழை ஆழமாகப் பயிற்றுவித்துப் “புலவர்” என்னும் பட்டம் அளித்து வந்த “தமிழ்க் கல்லூரி”கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன அல்லது அனைத்துப் பாடங்களும் சொல்லித் தரப்படும் கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுவிட்டன. இத்தகைய “புலவர்” பட்டம் பெற்றோரே உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணி அமர்வு செய்யப்பெற்றனர் !
தமிழ்க் கல்லூரிகளில் 100% தமிழே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்த நிலை மாறி, கலைக் கல்லூரிகளில் உயிரியல், பயிரியல், வணிகவியல், உளவியல், அளவையியல், கணிதவியல், என்று பிற பாடங்கள் நிரம்பப் புகுத்தப்
பெற்று, தமிழ் சொல்லிக் கொடுக்கும் பாட வேளைகள்
10% அளவுக்கும் கீழாகக் குறைந்துவிட்டன !
தமிழ் நாட்டுக்
கல்லூரிகளில் வழங்கப்பெறும் பட்டங்களின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வழங்கப் பெறும் பட்டங்கள் கூட B.A, B.Sc., M.A,
M.Sc. M.Com., M.Phil, என்று ஆங்கில வழியிலேயே இருக்கின்றன.
மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு; மாநில அரசின் ஆட்சி மொழி தமிழ்;
ஆட்சி மொழியான தமிழின் பெயரால் இயங்கி வரும்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப் பெறும்
பட்டத்தின் பெயரோ ஆங்கிலத்தில் !
தமிழ் நாட்டில்
தமிழக மக்களுக்காக என்று சொல்லி எடுக்கப்பெறும் திரைப்படங்கள் எல்லாமே கடந்த 10 ஆண்டுகளில் ஆங்கிலப் பெயர்களைத் தாங்கியே வருகின்றன. திரைப்படத்
துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செய்தி விளம்பரத் துறை இதைப் பற்றிக்
கண்டு கொள்வதே இல்லை !
தமிழகத்தில்
வெளியாகும் செய்தித் தாள்களில் கலப்பு மொழி தான் கோலோச்சுகிறது; தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்ப் பகைமைச் செயல்களில் ஈடுபடும்
செய்தித் தாள்களுக்கு அரசின் விளம்பரங்கள் தங்குத் தடையின்றி வழங்கப்படுகின்றன !
தொலைக் காட்சி
ஊடகங்களில் அரசின் ஆட்சி மொழியான தமிழ் சிதைக்கப்படுகிறது - சிறுமைப்படுத்தப்படுகிறது. அரசின் ஆட்சி மொழியாகச் சட்டமியற்றி அறிவிக்கப்
பெற்ற தமிழை யார் சீரழித்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு
அதிகாரம் உண்டு. ஆனால் அரசுத் துறைகள் இதைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை !
பிற மாநில
இளைஞர்கள் தமிழக அரசுத் துறைகளிலும், மின்வாரியம்,
கூட்டுறவுச் சங்கம் போன்ற அரசுச் சார்பு
நிறுவனங்களிலும் பணியமர்வு செய்யப்படுகின்றனர். இச்செயலால், தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது !
முன்பு ”தமிழகப் புலவர் குழு” என்று ஒரு அமைப்பு இயங்கி வந்தது.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்றம் தரக் கூடிய
கருத்துகளை அரசிடம் கோரிக்கையாக வைத்து நிறைவேற்றச் செய்து வந்தது. அடுத்து இந்தப்
பணியைத் “தமிழகத் தமிழாசிரியர் கழகம்” செய்து வந்தது. இவை போன்ற அமைப்புகள் இருந்த போது தமிழ் நலம் காக்கப்
பெற்றது; தமிழர் நலம் உறுதி செய்யப் பெற்றது !
காலப்போக்கில்,
பல காரணங்களால் ”தமிழகப் புலவர் குழு”, “தமிழகத்
தமிழாசிரியர் கழகம்” போன்றவை செயலிழந்து இருக்குமிடம்
தெரியாமல் போயின. இன்றைய நிலையில், ஞாயமான கோரிக்கையைக் கூட அரசிடம் முன் வைத்து நிறைவேற்றித் தருவதற்கு அமைப்புகளே
இல்லை என்னும் துன்ப நிலை தமிழகத்தில் நிலவுகிறது !
தமிழும்,
தமிழர்களும் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமாயின்,
அரசியல் சார்பற்ற தமிழ் அமைப்பு ஒன்று உருவாக
வேண்டும். இந்த அமைப்புக்கென விதிமுறைகளை உருவாக்கி, சங்கங்கள் சட்டப்படி, பதிவுத் துறையில் பதிவு செய்து,
அரசினால் ஏற்கப்பட்ட அமைப்பாக இயங்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தேர்தலை நடத்தி, இந்த அமைப்பின் ஆட்சியாளர்களைத்
(நிருவாகிகளை) தேர்வு செய்ய வேண்டும் !
இந்த அமைப்பு,
பதிவு செய்யப்பெற்ற அரசியல் சார்பற்ற அமைப்பு
என்பதால், அரசும், அதிகாரிகளும் இதற்கு உரிய உயரிடம் தந்தாக வேண்டும். தமிழ் மற்றும்
தமிழர் நலன் சார்ந்த செயல்பாடுகளே இந்த
அமைப்பின் நோக்கமாக இருக்கும் என்பதால், இதற்கு “தமிழறிஞர்கள் பேரவை” என்று பெயர் வைத்தல் சால்புடையதாக
இருக்கும் !
சங்கங்கள்
சட்டப்படிப் பதிவு செய்யப் பெற்று, வரவு செலவுக் கணக்குகள் ஆண்டுக்கொரு
முறை தணிக்கை செய்யப்பெற்று, சங்கப் பதிவாளரிடம் அளிக்கப்படும்.
இந்த அமைப்பின் பதிவும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். பதிவு செய்யப்பெற்ற
அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதால், இப்போது பணியில்
இருக்கும் ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்பட எந்த
அரசு அலுவலரும் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேரத் தடை இருக்காது. அரசு
அலுவலர்களின் நடத்தை விதிகள் இதைத் தடுக்காது !
“தமிழறிஞர்கள்
பேரவையில்” யாரெல்லாம் உறுப்பினர்களாகச் சேரலாம்
என்பது பற்றிக் கருத்துப் பரிமாற்றம்
செய்து முடிவு செய்யலாம். மாநில அளவில் செயல்படும் இந்த அமைப்புக்கு மாவட்ட அளவில்
ஆட்சியாளர்கள் (நிருவாகிகள்) இருப்பார்கள் !
எத்துணை பேர்
இந்த அமைப்பில் சேருவார்கள் என்று இப்போது கவலைப் படத் தேவையில்லை. 7 பேர் இருந்தால் போதும், இந்த அமைப்பைத்
தொடங்கிப் பதிவு செய்துவிடலாம். பின்பு, நிறையப்பேர்
வந்து உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்வார்கள் ! அடுத்த சில மாதங்களில் ஆயிரக் கணக்கில் உறுப்பினர்கள் உள்ள அமைப்பாக ”தமிழறிஞர்கள் பேரவை” மாறுவதை யாராலும் தடுக்க முடியாது !
தமிழின் நிலை
மிகவும் நலிவடைந்து வருகிறது. நெருக்குதல்கள் நாளுக்கு நாள் மிகுந்து வருகின்றன.
தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு
குமுகாயம் தமிழ் நாட்டிற்குள்ளேயே உருவாகி வருகிறது. தமிழர்களின் நலமும்
புறக்கணிக்கப்படுகிறது. எனவே, “தமிழறிஞர்கள் பேரவை” தொடங்கப்படுதல் இன்றியமையாத்
தேவையாகும். இந்த அமைப்பைத் தொடங்கிட முன்முயற்சி எடுக்குமாறு சில அன்பர்களிடம்
வேண்டுகோள் வைத்து, தொடர்பில் இருந்து வருகிறேன் !
இந்தச் சூழ்நிலையில், இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஒரே வரியிலாவது உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். குறிப்பாக, ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களும் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.
பணியில்
இருக்கும் ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கவிஞர்கள்,
அரசு அலுவலர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், மென்பொறியளர்கள், தமிழின் பால் ஈடுபாடு கொண்டிருக்கும்
வணிகர்கள், தொழிலமைப்பினர் மற்றும் பிறவகை
அன்பர்களும், தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்
வகையில் ”பேரவை தேவை” அல்லது “தேவையில்லை” என்று பதிவு செய்யலாம். !
கருத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் உங்கள் மின்னஞ்சல் (e mail i.d) முகவரியையும் சேர்த்துப் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யப் பெற்ற அமைப்பாகத் ”தமிழறிஞர் பேரவை” இயங்குமாதலால், இதற்கான விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இதைப்பற்றிச் சில நாள்களில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் !
தமிழ்ப் பணி
மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த அமைப்பில் நாம் சேர முடியுமா, முடியாதா என்னும் கவலையை விடுத்து, சேரமுடியும் என்னும் நம்பிக்கையுடன் மொழிக்கும், இனத்திற்கும் நலன் பயக்கும் அமைப்பு என்பதால் உங்கள் கருத்தைத்
தவறாது பதிவு செய்யுங்கள் !
மிகவும்
முதன்மைத் தன்மை வாய்ந்த இந்தக் கட்டுரையைத் தமிழகம் எங்கும் உள்ள மக்களிடம்
கொண்டு போய்ச் சேர்த்தால் தான், நமது நோக்கம் நிறைவேறும். எனவே தமிழ்ப்
பணி மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், நீங்கள்
உறுப்பினராக உள்ள வேறு சில குழுக்களுக்கு இதைக் கட்டாயம் பகிர்வு செய்திட
வேண்டும். அதை எல்லோரும் படிக்க வேண்டும்.
உங்கள் பகிர்வைப் படிக்கும் ஒவ்வொருவரும், “பேரவை”யின் தேவை பற்றி அப்போது தான்
கருத்துத் தெரிவிக்க முடியும் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 17]
{31-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக