ஊர்ப் பெயர் அறிவோம் !
[பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
என்னும் நூலில் இருந்து ஒருபகுதி]
------------------------------------------------------------------------------------
மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி
நிலத்து ஊர்கள் குறிச்சி என்று
அழைக்கப்பெற்றன. (எ-டு) வேளாக்குறிச்சி, துவரங்
குறிச்சி !
காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை
நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப் பெற்றன. (எ-டு)
குறிஞ்சிப்பாடி, காட்டுப்பாடி (காட்பாடி); புதுச்சேரி, கூனஞ்சேரி!
வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத
நிலத்தூர்கள் ஊர் என்று அழைக்கப் பெற்றன. (எ-டு) தஞ்சாவூர், வயலூர் !
கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல்
நிலத்து ஊர்கள் பட்டினம். பாக்கம் என்று அழைக்கப்பெற்றன. (எ-டு) காயல்பட்டினம், அதிராம்பட்டினம், முண்டியம்பாக்கம், ஊரப்பாக்கம் !
இந்த நால்வகை நிலங்களும் தன் நிலையிலிருந்து
திரியும் போது பாலை எனப்பட்டது. பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்று அழைக்கப்
பெற்றன !
மக்கள் தொகை பல்கிப் பெருகித் திணை
மயக்கம் உண்டான பின், இவ்வழக்கம் பெரும்பாலும் நின்று விட்டது !
இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்
பெயர்களும், ஊர்ப் பெயர் ஈறுகளும் வெவ்வேறு காரணம்
பற்றியவை !
ஆறை என்பது ஆற்றூர் (எ-டு) (பழையாறை).
புத்தூர் என்பது புதிய ஊர்;
(எடுத்துக் காட்டு):-
காட்டுப்புத்தூர், கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) பட்டி என்பது
கால்நடைத் தொழுவம் உள்ள ஊர்; (எ.டு)
கொண்டலாம் பட்டி, நேமத்தான் பட்டி !
பள்ளி
என்பது பௌத்த, சமண மடம் உள்ள ஊர். (எ-டு)
திருச்சிராப்பள்ளி, தொரப்பள்ளி. பாளையம் என்பது படை இருக்கும்
ஊர். (எ-டு) மேட்டுப் பாளையம், உத்தமபாளையம்
!
பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு
விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி. (எ-டு) செங்கழுநீர்ப்பட்டு
(செங்கற்பட்டு), சேற்றுப்பட்டு (சேத்துப்பட்டு). மங்கலம் என்பது பார்ப்பனர் இருக்கும் ஊர்.
சத்தியமங்கலம்,, நீடாமங்கலம் !
நத்தம் என்பது பார்ப்பனர் அல்லாதார் வாழும்
ஊர். (எ-டு) புலவர் நத்தம்,
இடையர்நத்தம். குடி
என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர். (எ-டு) காரைக்குடி, தூத்துக்குடி !
பேட்டை என்பது சந்தைகள் கூடும் ஊர். (எ-டு)
முத்துப் பேட்டை, புதுப்பேட்டை. புரம், புரி என்பன
அரசர் தலைநகர். (எ-டு) காஞ்சிபுரம், தருமபுரம், தருமபுரி, மருங்காபுரி !
மூதூர் என்பது பழைய ஊர்; பேரூர் என்பது மாநகர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு
சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; வாடை என்பது வேட்டுவர் அல்லது இடையர்
குடியிருக்கும் ஊர் !
பண்டார வாடை என்பது குடிகளுக்குரிய ஊர். அடங்காப்
பற்று என்பது அரசன் ஆணைக்கு அடங்காதவர்
வசிக்கும் ஊர். குடிக்காடு என்பது குடிகள்
வசிக்கும் காட்டூர் !
குடியேற்றம் என்பது மக்கள் குடியேறிய
ஊர். கல்லாங்குத்து என்பது கடின நிலத்து
ஊர். முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்து ஊர். எயில் என்பது மதில் சூழ்ந்த
ஊர். விண்ணகரம் என்பது திருமால் கோயில் உள்ள ஊர் !
ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய
ஈறுகளில் முடியும் பேர்களைக் கொண்ட ஊர்கள், அவ்வீறுகளாற்
குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை. ஏரி என்று முடியும் பெயரைக் கொண்ட ஓரூரில் ஏரி
இல்லாவிடின், அது ஒரு காலத்தில் இருந்து பின்னர்த்
தூர்ந்து போனது என்று அறிதல் வேண்டும்.இங்ஙனமே பிறவும் !
புறம், பட்டு முதலிய
சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பெயர் இழந்து பொதுப்
பெயராக வழங்கி வருகின்றன. இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும்
உணர்த்தா என்பதை அறிக !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 15]
{29-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக