எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

தமிழ் (07) தமிழ்ச் சொற்களைத் தமிழாகவே பலுக்குங்கள் !

 01.  நிமிடம் நிமிஷம்

நிமிடம்என்பது தமிழ்ச் சொல். இ - இம் - ஞிம் - ஞெம  - ஞெமி - ஞெமிடு - நிமிடு - நிமிடல் - நிமிடு + அம் = நிமிடம். இவ்வாறு சுட்டொலியில் தோன்றிய ஞெம்என்னு வேரில் கிளைத்த ஞெமிடல்கை விரல்களை நெரித்தல் என்னும் பொருள் கொண்டது. (பக்கம் 89 சூடாமணி நிகண்டு)

 

02.  சாடி ஜாடி.

சாடிஎன்பது தமிழ்ச் சொல். குடமொடு கரீரம், சாடி,குடங்கரே கும்பம் என்பது சூடா மணி நிகண்டு செய்யுள் 74.  வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்தபெரும்பாணாற்றுப்படை.

 

03.  சோலி ஜோலி

சோலிஎன்பது தமிழ்ச் சொல். சோலி என்பது கவனிக்க வேண்டிய சொந்த வேலையைக் குறிக்கும். (பக்கம். 53. பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்.

 

04.  சொலித்தல் = ஜொலித்தல்

சொலித்தல்என்பது தமிழ்ச் சொல்.  பக்.58. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள் காண்க. சுவாலைஎன்பது மிகுந்த ஒளி எழுப்புகையில் சுவாலிக்கிறது. சுவாலிஎன்ற சொல் சொலிஆகி பின்னர் ஜொலி  ஆகிவிட்டது.

 

05.  சுவாலை = ஜுவாலை

சுவாலைஎன்பது தமிழ்ச் சொல். எரியும் பொருள் மிகுந்த ஒளி எழுப்புவதை சொலிக்கிறது என்று சொல்கிறோம். சொலிஎன்ற சொல் சுவாலியின் மரூஉ. சுவாலிப்பது சுவாலை. சுவாலையே இப்போது ஜுவாலை ஆகிவிட்டது. பக்.58 பாவாணரின் வேற்சொற் கட்டுரைகள் காண்க.

 

06.  உண்ணம் = உஷ்ணம்

உண்ணம்என்பது தமிழ்ச் சொல். உல் - உள் - உண் - உண்ணம். (பக்.55.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள்)

 

07.  கட்டம் =கஷ்டம்

கட்டம்என்பது தமிழ்ச் சொல். குல் - குன் - குண்  - கண்  -  கடு  - கட்டம்-  கஷ்டம். (பக். 188.பாவாணரின் வே.சொ.கட்டுரைகள் காண்க)

 

08.  நட்டம் = நஷ்டம்

நட்டம்என்பது தமிழ்ச் சொல். உல் (உள் ஒடுங்கல் கருத்து வேர்) - உடு - இடு - ஒடு - நடு - நட்டம் .

(பக் 78. பாவாணரின் வே.சொ.கட்டுரைகள் மற்றும் பக். 188 காண்க.)

 

09.  சுரம் = ஜுரம்

சுரம்என்பது தமிழ்ச் சொல். சுல் - சுள் - சுர் - சுரம். சுல் என்பது சுடுதற் கருத்து வேர். ( பக்.212. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்).

 

10.  ஓகி = யோகி

ஓகம்”, “ஓகிஎன்பவை தமிழ்ச் சொற்கள். ஓகி என்னும் சொல் திரிபு அடைந்து யோகி என்று வழங்கப்படுகிறது. அதுபோல் ஓகம்என்பது யோகம்எனத் திரிபு அடைந்துவிட்டது.

(பக் 215. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள் )

 

11.  மாழை = உலோகம்

மாழைஎன்பது தமிழ்ச் சொல். உலோகம் என்பது தமிழ்ச் சொல் அன்று. மாழை என்பதே தமிழ்ச் சொல். (பக்.217. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்).(பக் 128 , 129 சூடாமணி நிகண்டு (பழைய நூல்) )

 

12.  சாடை = ஜாடை

சாடைஎன்பது தமிழ்ச் சொல். சுல் (வளைதற் கருத்து வேர்) - சுள் - சூள் - சூடு - சாடு - சாடை.= சாயல். (பக்231. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்).

 

13.  சேரலம் = கேரளம்

சேரன் - சேரலன் - சேரலம் - கேரளம். சேரலன் நாடு சேரலம். சேரலம் என்பது மருவி கேரளம் ஆகியுள்ளது. (பக். 236. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்.).

 

14.  திரம் = ஸ்திரம்

திரம்என்பது தமிழ்ச் சொல். துல் - தில் - திர் - திரம் = உறுதி, வலிமை. துல் என்னும் பொருந்தற் கருத்து வேரிலிருந்து திரம் உருவாயிற்று. (பக் 263. பாவாணரின் வேர்ச் சொற் கட்டுரைகள்).

 

15.  சுவடிப்பு = ஜோடிப்பு

சுவடி” ”சுவடிப்புஎன்பவை தமிழ்ச் சொற்கள். பக்.288 வேர்ச் சொற் கட்டுரைகள் காண்க. சுவடிப்பு என்ற சொல்லே ஜோடிப்பு என்று உரு மாற்றம் பெற்றுள்ளது.

 

16.  சீரகம் = ஜீரகம்

சீர்மை + அகம் = சீரகம். உடம்பை சீர் செய்து பாதுக்காக்கும் ஒரு மூலிகைப் பொருள் சீரகம்”.  சீரகம்என்னும் தமிழ்ச் சொல்லை , நாமே வட மொழியாளர்களுக்குத் தத்துக் கொடுப்பது போல் ஜீரகம்என்று வலிந்து பலுக்குகிறோம் (உச்சரிக்கிறோம்).

 

17.  வேட்டி வேஷ்டி

தறியில் சீலை போல நீளமாக நெய்து, பின்பு 4 முழம், 8 முழம் என்று குறிப்பிட்ட அளவில் வெட்டிஎடுப்பதால், ”வெட்டிஎன்ற சொல் ஆதி நீடல் என்னும் இலக்கணப்படி வேட்டிஎன்று ஆகியது. வேட்டிஎன்பது தமிழ்ச் சொல். இத்தமிழ்ச் சொல்லை நாம் வலிந்து பலுக்கி (உச்சரித்து) வேஷ்டிஆக்கி, வடமொழியாளருக்குத் தத்துக் கொடுத்து விட்டோம். இனிமேலாவது வேட்டிஎன்று சொல்வோமே !

 

18.  மேழம் = மேஷம்

மேழம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ஆடு என்று பொருள். இச்சொல்லை மேஷம்என்று வலிந்து பலுக்கி (உச்சரித்து) மேழம்என்னும் தமிழ்ச் சொல் மேஷம்என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததோ என ஐயுறும் படிச்செய்துவிட்டோம். இனிமேலாவது மேழம்என்று சொல்லிப் பழகுவோம்.

 

19.  புத்தகம் = புஸ்தகம்

பல கருத்துகளைப் பொத்தி அகப்படுத்திது என்னும் கருத்தில் உருவான பொத்தகம்என்னும் சொல், காலப் போக்கில் புத்தகம்ஆயிற்று. புத்தகம்என்னும் தமிழ்ச் சொல்லை நாம் புஸ்தகம்என்று பலுக்கியும் எழுதியும் வருவதால், ஒரு தமிழ்ச் சொல்லை வடமொழிக்குத் தத்துக் கொடுத்த குற்றத்தை நாம் இழைத்து வருகிறோம்.

 

20.  மாதம் = மாசம் / மாஸம்.

மதி( நிலா) என்னும் சொல்லிலிருந்து உருவானது மாதம். மாதம்என்னும் தமிழ்ச் சொல்லை மாசம்அல்லது மாஸம்என்று திரித்துப் பலுக்கியும் எழுதியும் வருகிறோம். இனிமேலாவது மாதம்என்று சொல்வோமே !

 

21.  தக்கணம் = தஷிணம்

தக்கணம்என்ற தமிழ்ச் சொல்லுக்கு தெற்குஎன்று பொருள். இச்சொல்லை தஷிணம்என்று தவறாக எழுதுகிறோம்; பேசுகிறோம். தக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்....என்னும் மனோன்மணீயம் பாடல் வரிகளை நோக்குக !

 

22.  விண்டு = விஷ்ணு.

விண்டுஎன்னும் தமிழ்ச் சொல்லுக்கு ஆகாயம் என்று பொருள். வானளாவிய பேருருவம் எடுத்துக் காட்சி தந்தமையால் திருமாலுக்கு விண்டுஎன்று பெயர். இப்பெயரை நாம் விஷ்ணுஆக்கி எழுதியும் பேசியும் வருகிறோம்.  தவறினை இப்போதாவது திருத்திக் கொள்வோமே !

 

23.  அம்மா = அம்பா / அம்பாள் 

   அம்மை = அம்பிகை

தமிழில் உள்ள அம்மாஎன்ற சொல் வடமொழியில் அம்பாஎன்று ஆயிற்று. ஒப்பு நோக்குக := சுந்தராம்பா, கண்ணாம்பா. அம்மாஎன்னும் சொல்  அம்மைஎன்றும் தமிழில் வழங்கும். வடமொழியில் அம்பாஎன்று வழங்கப்படும் சொல் அம்பாள்என்றும் அம்பிகைஎன்றும் திரிபடைந்து வழங்கப் பெறுகிறது. ஒப்புநோக்குக: சாரதாம்பாள், சுந்தராம்பாள், உமையாம்பாள், பாலாம்பிகை, நீலாம்பிகை. எந்தப் பெயராயினும் அம்மாஅல்லது அம்மைஎன்னும் பின்னொட்டுடன் வழங்கப் பெறுதலே தமிழ் மரபு. இனி அம்பாள்”, “அம்பிகைஎன்னும் பின்னொட்டுகளைக் கைவிட்டு அம்மைஎன்றே வழங்குவோம். எடுத்துக் காட்டு: அங்காளம்மை, வடிவுடையம்மை, நீலம்மை.

 

24.  அரி = ஹரி.

அரிஎன்னும் தமிழ்ச் சொல்லுக்கு சிங்கம், திருமால் என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு. (நரன் + சிம்மம்) = நரசிம்ம அவதாரம் எடுத்தத் திருமாலை அரிஎன்று அழைத்தனர்.  வடமொழியாளர்களின் மேலாண்மை தமிழ்நாட்டின் ஓங்கிய காலை அரிஎன்பது ஹரிஆயிற்று. தமிழ்ப் பற்று உள்ளோர் இனி அரிஎன்றே சொல்வோம்.

 

25.  அரன் = ஹரன்

அரன்என்ற சொல்லுக்கு சிவன்என்று பொருள். அரன்என்னும் தமிழ்ச் சொல்லை ஹரன்என்று வடமொழியாளர்கள் மாற்றிவிட்டனார்.  இனியாவது அரன்என்று சொல்வோமே !

 

26.  முட்டி = முஷ்டி

முட்டி”, “முட்டுதல்”, ”மூட்டு  என்பவை எல்லம் தமிழ்ச் சொற்கள். ஐந்து விரல்களையும் உள்ளங் கையில் மடக்கி வைத்துக் கொள்ளும் தோற்றத்திற்கு முட்டிஎன்று பெயர். முட்டுதல்என்றால் குத்துதல்என்று பொருள். கைக்குள் விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு எதிரில் இருப்பவரைத் தாக்கும் நிலைக்குக்  கையால்  குத்துதல்என்று பெயர். முட்டுதல்செய்யும் உறுப்பு முட்டிஇதைத்தான் முஷ்டிஎன்று தவறாகப் பேசியும், எழுதியும் வருகிறோம்.

 

27.  சவளி = ஜவுளி

சவளி என்பது தமிழ்ச் சொல்.இந்தத் தமிழ்ச் சொல்லை நாம் வலிந்து ஜவுளி என்று உச்சரித்து அதை வடமொழிச் சொல் போலத் தோற்றமளிக்கச் செய்கிறோம்.( பக்.14.வே.சொ.க.காண்க.)

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் ! தமிழ் ! தமிழ் !” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053,மீனம் (பங்குனி 27]

{10-04-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக